Kathir News
Begin typing your search above and press return to search.

1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அரசு மூன்றாவது முறையாக வெற்றி : மக்களுக்கு நன்றி- பிரதமர் மோடி மகிழ்ச்சி!

1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மத்திய அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றிருப்பதாக பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அரசு மூன்றாவது முறையாக வெற்றி : மக்களுக்கு நன்றி- பிரதமர் மோடி மகிழ்ச்சி!
X

KarthigaBy : Karthiga

  |  5 Jun 2024 6:09 AM GMT

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது .இதன் மூலம் மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது .தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று மாலையில் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

1962 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மக்கள் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீதான நம்பிக்கையின் வெற்றி ஆகும். நமது அரசியல் சாசனம் எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது. இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக உருவாக்குவதற்காக கட்சி பேதம் இன்றி அனைத்து மாநில அரசுகளுடனும் இணைந்து பணியாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன் ஊழலுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது.

அரசியல் நலனுக்காக ஊழல் வெட்கமின்றி மகிமைப்படுத்தப்படுகிறது. எங்கள் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் அனைத்து வகையான ஊழலையும் வேரறுப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக கவனம் செலுத்தும். இந்த தேர்தலில் பல மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் இணைந்து பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையைவிட பாஜக தனித்து வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை அதிகம். மத்தியபிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் ,ஒடிசா ,டெல்லி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்று இருக்கிறது. கேரளாவில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த மாநிலத்தில் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் ஒடிசாவில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது .இதற்காக அந்த மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய இந்த தேர்தலை மிகவும் திறமையாக நடத்திய தேர்தல் கமிஷனருக்கு நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார் .இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் மக்களின் இந்த அளவு கடந்த பாசத்துக்கு தலை வணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக மேற்கொண்ட பணிகள் தொடரும் என குறிப்பிட்டு இருந்தார். புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொள்ளும் என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News