Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரம்பம் முதல் இறுதி வரை- 'வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனின் வரலாறு'!

நல்ல நடிகராகவும் நல்ல அரசியல்வாதியாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜயகாந்த் அவர்களின் வரலாறு பற்றி காண்போம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை-  வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனின் வரலாறு!

KarthigaBy : Karthiga

  |  29 Dec 2023 4:00 AM GMT

அவமானங்களை வெகுமானங்களாக்கி சினிமாவில் சிகரம் தொட்டவர் விஜயகாந்த். மதுரையில் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் விஜயகாந்த் . சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களை பார்த்து வளர்ந்த அவர் தான் ஒரு நடிகராக வேண்டும் என்ற முடிவுடன் இருந்தார். அந்த கனவுடனும் நண்பர்கள் கொடுத்த உற்சாகத்துடன் 1978 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார். அப்போதெல்லாம் சினிமாவில் நுழைவது என்பது அவ்வளவு எளிதானதல்ல .கருப்பு நிறம்,கிராமத்து பின்னணி கொண்ட இளைஞராக இருந்த விஜயகாந்துக்கு அந்த உண்மை புரிந்தது. இருப்பிடம் மனம் தளராமல் ஒவ்வொரு பட நிறுவனங்களால் ஏறி இறங்கி வாய்ப்புகளை கேட்டு வந்தார்.


சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு அவமானம் மட்டுமே கிடைத்தது. இருப்பினும் துவண்டு விடவில்லை. அவையெல்லாம் பின்னர் தனக்கு வெகுமானங்களாகும் என்று நம்பிக்கையுடன் தனது முயற்சியை தொடர்ந்தார். பலப்பட நிறுவனங்களில் தனது புகைப்படங்களை கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தார் விஜயகாந்த். அப்படி ஒருமுறை சென்றபோதுதான் இயக்குனர் எம்.ஏ காஜாவின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு 1979 ஆம் ஆண்டு எம்.ஏ காஜா இயக்கத்தில் வெளிவந்த 'இனிக்கும் இளமை ' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் .அதுவரை விஜயராஜ் என்று இருந்த அவரது பெயரும் விஜயகாந்த் என்றானது .


இதன் மூலம் திரைப்படத்துறையில் கால் பதித்தவருக்கு பின்னர் சரியாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. கதாநாயகனை தவிர மற்ற வேடங்களுக்கு மட்டுமே அவருக்கு அழைப்பு வந்தது. நடித்தாலௌ கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்து விஜயகாந்த் தனக்கு பிடிக்காத வேடங்களை நிராகரித்தார். அதற்கு அவரது உற்ற நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் உறுதுணையாக இருந்தார். 1984 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு கிடைத்த படங்கள் அனைத்தும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. குறிப்பாக அம்மன் கோவில் கிழக்காலே , ஊமை விழிகள், நினைவே ஒரு சங்கீதம் ,உழவன் மகன், செந்தூரப்பூவே ,பூந்தோட்ட காவல்காரன், புலன்விசாரணை , சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் , என் ஆசை மச்சான் , வானத்தைப்போல, வல்லரசு, ரமணா உட்பட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தார் .


நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் மிக உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் விஜயகாந்த்துக்கு ரசிகர் பட்டாளங்கள் பெருகின. தமிழகம் முழுவதும் அவரது ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன . தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் பெயர்களுக்கு முன்னால் சிறப்பு பெயர்களை வைத்து அழைப்பது போல விஜயகாந்த்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல அனைவருமே கேப்டன் என்றே அடைத்தனர் .விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமின்றி சிறந்த தலைமை பண்பையும் கொண்டவர். அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற போது தான் சங்கத்தின் கடனை அடைத்தார். இதற்காக தமிழ் திரை உலகில் உள்ள அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளையும் சிங்கப்பூர், மலேசியாவுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சியை நடத்தினார்.


அப்போது தான் அழைத்துச் சென்ற அனைத்து கலைஞர்களையும் பாதுகாத்த விதம் அனைவரையும் ஈர்த்தது. சினிமாவில் நடைபெற்ற கலைஞர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தார். இலங்கை பிரச்சனைக்காகவும் காவிரி பிரச்சனைக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் 2002 ஆம் ஆண்டு காவிரி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது சக நடிகர்களை அழைத்து சென்று நெய்வேலியில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். தன்னை பார்க்க வீட்டுக்கு வரும் சினிமா கலைஞர்கள் தொண்டர்கள் உப்படை யார் சென்றாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் திருப்பி அனுப்ப மாட்டார். சினிமா வாய்ப்பு தேடி வரும் இளம் இயக்குனர்கள் பலர் உரிமையோடு மத்திய சாப்பாட்டுக்கு விஜயகாந்த் வீட்டுக்கு அடிக்கடி செல்வார்கள். அப்போது தான் என்ன உணவு உண்பாரோ அதே உணவைத்தான் அனைவருக்கும் வழங்கச் சொல்வாராம்.


விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்திலும் கதாநாயகன் இயக்குனர் உள்ளிட்ட முதல் தர நபர்களிலிருந்து கடைநிலை தொழிலாளி வரைக்கும் ஒரே தரத்திலான சாப்பாடு வழங்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். அது கிடைக்கிறதா என்பதையும் கண்காணிப்பார் . படப்பிடிப்பு தளத்தில் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் அமர்ந்து ஒன்றாக உண்பார் . ஒருமுறை சினிமா கலைஞர்களுக்கு உணவு இல்லை என்பதை அறிந்து தயாரிப்பு நிறுவனத்திடம் 'எனது சம்பளத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை ஏடைகளுக்கு உதவி செய்தார். இலவச திருமணங்களை நடத்தி வைத்தார். தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி 2006 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தனியா 8.33% வாக்குகளை பெற்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தார்.


தேமுதிக தலைவர் ,சட்டமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்று அரசியலில் தன்னை உயர்த்திக்கொண்ட விஜயகாந்த் சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் கடந்த 26 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் செயல் இழந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு 'வெண்டிலேட்டர்' எனப்படும் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் நேற்று காலை மரணம் அடைந்தார்.மரணமடையும்போது அவருக்கு வயது 71. சினிமாவிலும் அரசியலிலும் போராடி சாதித்தவர். ஒரு நல்ல நடிகராக, ஒரு நல்ல அரசியல்வாதியாக ஒரு நல்ல மனிதராக என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று உயர்ந்து நிற்கிறார் கேப்டன்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News