ஒரே மாதத்தில் 3வது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. நடுத்தர மக்கள் அவதி.!
ஒரே மாதத்தில் 3வது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. நடுத்தர மக்கள் அவதி.!
By : Kathir Webdesk
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரே மாதத்தில் 100 ரூபாய் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கூலித்தொழில் செய்பவர்கள் மற்றும் நகரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் சிலிண்டர் விலை ஏற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றது. இன்றைய நிலவரப்படி 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 810 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.