பிரதமர் மோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய காசா ஆஸ்பத்திரி குண்டு வீச்சு - தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியது என்ன?
காசா ஆஸ்பத்திரி மீதான குண்டு வீச்சில் 500 பேர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

By : Karthiga
இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான போர் பத்து நாட்களை தாண்டி நீடித்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் தெற்கு காசா பகுதி மீது இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியதால் அங்குள்ள அல்அக்லி ஆஸ்பத்திரி மீது குண்டுகள் விழுந்து பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது .
500 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கு இஸ்ரேல் போர் விமானங்களே காரணம் என்று ஹமாஸ் படையினர் குற்றம் சாட்டினர் .ஆனால் தாங்கள் காரணம் இல்லை என்றும் ஹமாஸ் படையினரின் ராக்கெட் தவறுதலாக ஆஸ்பத்திரி மீது விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது :-
காசா பகுதியில் உள்ள அல்அக்லி ஆஸ்பத்திரியில் நடந்த குண்டு வீச்சில் ஏராளமான உயிரிழந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தற்போது நடந்து வரும் போரில் பொதுமக்கள் பலியாவது மிகவும் கவலைக்குரியது. இதற்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க செய்யப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI
