ஆறு வயது சிறுமி தேவாலயத்தில் பலாத்காரம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு.
By : Naveena
தனது ஆறு வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த பலாத்காரச் சம்பவம் தொடர்பாக, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். பெங்களூரு வித்யாரண்யபுராவின் தொட்டபெட்டஹள்ளி அருகில் காவேரி லே அவுட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. தேவாலயத்திற்கு பக்கத்தில் வாழ்ந்து வந்த தம்பதியினர், தினமும் வேலைக்கு செல்வதற்கு முன் தங்களது ஆறு வயது மகளை தேவாலயத்தில் பணிபுரியும் சைமன் பீட்டர் என்பவரிடம் விட்டுவிட்டு பணிக்கு செல்வர். மாலை பணி முடிந்ததும் தேவாலயத்திற்கு வந்து மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு சைமன் பீட்டர் சிறுமிக்கு ஆபாசப் படங்களை காண்பித்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த சித்திரவதையை 14 வயது ஆகும் வரை சிறுமி அனுபவித்து வந்துள்ளார். இதை பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என சிறுமியை பயமுறுத்தியதால் இதை அவள் பெற்றோர்களிடம் கூட தெரிவிக்க முடியவில்லை.
இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த சிறுமி அதே தேவாலயத்தில் பணிபுரியும் சாமுவேல் டிசோசோ அவர்களிடம் கூறினாள். இதனை பயன்படுத்திக் கொண்டு சாமுவேலும் கூட்டு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் அச்சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனைத் தெரிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் சாமுவேல் டிசோசாவை எச்சரித்தனர். இந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சிறுமிக்கு ஆலோசனையும், சிகிச்சையும் அளித்து வந்தனர். 18 வயது பூர்த்தி அடைந்த அப்பெண் குணமடைந்து, தற்போது காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். அக்குற்றத்திற்க்கு காரணமான இருவரையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆறு பேரையும் குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலாத்காரம் செய்த இருவர் மீதும் 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தும் சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்து சம்பவத்தை மறைக்க முயன்ற எட்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinamalar https://m.dinamalar.com/detail.php?id=3086719