தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது யார்.? அரசே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது : பின்னணியில் விளையாடும் உலக அரசியல்!
தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது யார்.? அரசே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது : பின்னணியில் விளையாடும் உலக அரசியல்!
By : Kathir Webdesk
கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ''தங்கம், இறக்குமதி பொருள் என்பதால், சர்வதேச சந்தைக்கு ஏற்ப, அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது; அதனால், தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது எளிதல்ல,'' என, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சரி… இந்த தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது யார்? தங்கத்தின் விலை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது? என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்வோம்.
தங்கம் அனேகமாக வெளிநாடுகளில் இருந்தே அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் அந்த அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவே புல்லியன் டீலர்ஸ் அல்லது புல்லியன் டிரேடர்ஸுக்கு விற்கப்படுகிறது. இது அன்றன்றே நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. தங்கம் விலை வெளிநாட்டில் உள்ள டாலர் அல்லது பவுண்ட் மதிப்பை வைத்து இதர செலவுகளையும் வைத்துக் கணக்கிடப்படுகிறது. பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கேற்ப, அன்றைய தேவைக்கேற்ப தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது. தங்கம் எந்தநாட்டிலிருந்து வாங்கப்படுகிறதோ, அந்த நாட்டின் விலை, கஸ்டம்ஸ் டியூட்டி, மற்ற பிற செலவுகள் சேர்த்து இந்தியன் புல்லியன் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) எனப்படுகிற இந்திய தங்க வியாபாரிகள் அமைப்புக்கு விற்கப்படுகிறது. அது மும்பையை சேர்ந்த ஓர் அமைப்பு. அன்று பல பேர் சேர்ந்து வாங்கும் திறனுக்கும் வாங்கும் அளவுக்கும் அன்றைய தேவைக்கும் ஏற்பவே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவை 6 கூட்டுத் தேவைகளுக்கு ஏற்பவே நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவை…
- அன்றைய சர்வதேச விலை
2.கஸ்டம்ஸ் டியூட்டி (10 சதவிகிதம்) - வாட்
- ஆக்ட்ராய் (Octroi) - அதாவது, தங்கம் கொண்டு போய் சேரும் வரையிலான செலவு
- ப்ரீமியம்
- அவர்களது லாபம்.
இவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். மும்பை இன்று இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமாக இருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்க வியாபாரத்தில் முன்னிலை வகிக்கிற நாடுகள். ஐரோப்பில் உள்ள லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) என்கிற அமைப்பே காலங்காலமாக உலகத்தின் தங்க மதிப்பை நிர்ணயம் செய்கிறது. காலை 10:30 மணிக்கும் மாலை 3 மணிக்கும் என இருமுறை தங்கத்தின் விலை மாறுபடுகிறது. லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் 100க்கும் மேலான உலகத்தின் மிகப்பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்களைக் கொண்டது. இரண்டு முறை தொலைபேசி அழைப்புகளின் மூலம் மதிப்பு நிர்ணயிக்கப்படும்.
5 நிறுவனங்கள் இதை ரெப்ரசென்ட் செய்யும். அவை தமக்கு மட்டுமின்றி, தம் வாடிக்கையாளர்கள் சார்பாகவும் ரெப்ரசென்ட் செய்யும். அதாவது, அவர்களது வாடிக்கையாளர்கள் வாங்கவும் விற்கவும் ஆர்டர் கொடுப்பார்கள். அவற்றைப் பெற்ற பிறகு இந்த மதிப்பு அன்றைய தினத்தின் தேவைக்கேற்ப தங்கள் கையிருப்பை வைத்தும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்தும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்த பிறகே இந்த விலையை நிர்ணயம் செய்வார்கள்.
தங்கத்தின் பேப்பர் மதிப்பை செயற்கையாக ஏற்றுவதும் இறக்குவதும் சில நேரங்களில் நடப்பதுண்டு. இதுபோல பலவித தந்திரங்களைக் கையாள்வார்கள். இதை அமெரிக்க டாலராகவோ, ஐரோப்பிய யூரோவாகவோ, பிரிட்டிஷ் பவுண்டாகவோ தங்க விலையை மேற்கூறிய 6 கூட்டுத் தேவைகளுக்கேற்ப அவரவர் தம் நாட்டுக்கேற்ப நிர்ணயம் செய்து மாற்றிக் கொள்வார்கள். நியூயார்க், துபாய் போன்ற நாடுகளின் விலை பொதுவானதாகவோ, பிரபலமானதாகவோ இல்லை. தங்க விற்பனையில் துபாய் முன்னிலை வகிக்கிற நாடாக இருந்தாலும் அது எந்த விலையையும் நிர்ணயம் செய்வதும் இல்லை. அதை எந்த நாடும் பின்பற்றுவதும் இல்லை.
தங்கம் விலை என்பது தேவை மற்றும் சப்ளைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. அதாவது நமது தேவை சுமாராக 100 டன் என்றால் சப்ளை 90 டன் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அந்தத் தங்கத்துக்கான தேவை அன்றைய தினத்தில் அதிகமாக இருப்பதால் விலை அதிகமாக இருக்கும். அதே நேரம் தேவை குறைவாகவும் சப்ளை அதிகமாகவும் இருக்கும் போது தங்கத்தின் விலை குறைவாக இருக்கும். லண்டன், நியூயார்க், ஷங்காய், இந்தியா, துபாய், ஜப்பான் போன்ற நாடுகளின் தேவையே இந்த டிமாண்ட் சப்ளையை அதிகம் நிர்ணயம் செய்கின்றன. இவற்றில் பெரும் பங்கு வகிப்பது சீனா முதலிலும், இந்தியா அதற்கடுத்த நுகர்வோராகவும் இருக்கின்றன.
இவை அல்லாது பார்க்ளேஸ், பாங்க் ஆஃப் சீனா, கோல்ட் மேன் சாக்ஸ், ஹெச்எஸ்பிசி வங்கி, ஜேபி மோர்கன் சேஸ், மோர்கன்ஸ் ஸ்டான்லி, ஸ்டாண்டர்டு சாட்டர்ட் வங்கி, SCOTIA- MOCATTA, டொரண்டோ டொமினியன் வங்கி மற்றும் யுபிஎஸ் வங்கி போன்ற அனைத்தும் இதில் பங்கேற்கின்றன. அடுத்து உலகத்தின் இன்றைய மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இருக்கிற சீனா, உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் வகையில் புதிய கொள்கைகளைக் கொண்டு வந்திருக்கிறது. இதுவரை அதிக அளவு தங்கம் நுகரும் நாடாக சீனா இருந்த போதுகூட, லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் மட்டுமே விலையை நிர்ணயம் செய்து வந்தது. இப்போது சீனா அதிக தங்கச் சுரங்கங்களை வாங்கத் தொடங்கியிருக்கிறது.
லண்டன், நியூயார்க் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பெட்டகத்தில் வைத்திருந்த தங்கத்தைத் தன்னிடத்தே கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா இரண்டும் தங்கத்தை வர்த்தகம் செய்கிற இடமாகவும் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடமாகவும் இருந்தாலும், அதிக அளவில் நேரடியான தங்கத்தை வைத்துக் கொண்டதில்லை. ஆனால், சீனா உலகிலேயே அதிக அளவு நேரடித் தங்கத்தை கையிருப்பாகவும், பேப்பர் கோல்டாகவும் வைத்திருக்கிறது. இதனால் வல்லரசான அமெரிக்கா கூட எக்ஸ்சேஞ்ச் ரேட் மதிப்பு டாலர், பவுண்டில் இருந்து சிறிது சிறிதாக மாறத் தொடங்கி, சீனாவின் யுவான் அதிக ஆதிக்கத்தை செலுத்தக்கூடுமோ என பயப்படுகிறது. கடந்த ஏப்ரலில்தான் சீனா அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
நம் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் தங்கம் விலை மாறுகிறது எனப் பார்த்தோம். அந்த மாநிலத்தின் வரி விகிதம், தங்கம் எந்த வங்கி மூலம் எடுத்துவரப்பட்டு எவ்வளவு தூரம் சென்றடைகிறதோ, அதற்குண்டான மற்ற செலவுகள், ஆக்ட்ராய் எல்லாம் சேர்ந்து அந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக அதிக கலாசாரங்களையும் அதிக தேவைகளையும் கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தங்கம் விலை வேறு வேறாக இருக்கிறது. வட இந்தியாவில் திருமண சீசன் என்றால், தென்னிந்தியாவில் வேறு மாதங்களில் திருமண சீசன் ஆரம்பிக்கும்.
தென்னிந்தியாவிலேயே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான திருமண சீசன் நடைபெறும். நாம் ஆடி மாதம் என்று சொல்வோம். ஆந்திராவிலோ ஆடி மாதத்தின் பாதியிலேயே முகூர்த்த சீசன் ஆரம்பித்து விடும். கர்நாடகாவில் திருமண சீசன் வேறு மாதிரி இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெயில் காலம், மழைக்காலம் என எல்லாமே வேறுபடுகின்றன.
மதவாரியான பண்டிகை நாட்கள் உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ், ரம்ஜான், தீபாவளியை ஒட்டி தங்கம் விலை அதிகரிக்கும். இவ்வளவும் தங்கம் விலை நிர்ணயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகளே. லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்கிறோம். இன்றுவரை லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்லக்கூடிய லண்டனிலேயே தினமும் தங்க விலை தினம் 2 வேளைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. லண்டன் கோல்டு ஃபிக்ஸில் புல்லியனை வியாபாரம் செய்கிற 5 பிரதான வங்கிகள் பங்கேற்று அவை தம்முடைய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப - அதாவது, தம்மிடம் சுமாராக 10 வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அந்த 10 பேரின் தேவைக்கேற்ப (ஒரு வாடிக்கையாளர் வாங்குவார்… இன்னொருவர் விற்பார். ஒரு வாடிக்கையாளர் 100 கிலோ வாங்குவதாக இருப்பார்.
இன்னொருவர் 50 கிலோ விற்பதாகச் சொல்வார்) இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து அன்றைய தேவை என்ன எனக் கணக்கிட்டு எத்தனை பேர் வாங்குகிறார்கள், எத்தனை பேர் விற்கத் தயாராக இருக்கிறார்கள் என அந்த 5 வங்கிகளும் வெகுசில நிமிடங்களில் முடிந்துவிடக்கூடிய பரிவர்த்தனையை அலசி ஆராய்ந்து தமக்கு எவ்வளவு தேவை என முடிவெடுப்பார்கள். இதையே லண்டன் கோல்டு ஃபிக்ஸ் என்று சொல்கிறார்கள். இதுவரை அனைத்து நாடுகளும் இதையே பின்பற்றி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா இரண்டும் தங்கத்தை வர்த்தகம் செய்கிற இடமாகவும் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடமாகவும் இருந்தாலும், அதிக அளவில் நேரடியான தங்கத்தை வைத்துக் கொண்டதில்லை. ஆனால், சீனா உலகிலேயே அதிக அளவு நேரடித் தங்கத்தைக் கையிருப்பாகவும், பேப்பர் கோல்டாகவும் வைத்திருக்கிறது.