போக்குவரத்து விதிகளை மீறும் அரசுப் பேருந்துகள்: வெளிச்சத்திற்கு வந்த பல உண்மைகள்- கண்டுகொள்ளுமா தி.மு.க அரசு?
சமீபத்தில் நடந்த காவலர்- நடத்துனர் பிரச்சனையில் அரசு பேருந்து தொடர்பாக பலவித உண்மைகள் வெளியாகி உள்ளன. இவற்றிற்கெல்லாம் முறையான தீர்வு எடுக்குமா திமுக அரசு என்பது கேள்வியாகவே உள்ளது.
By : Karthiga
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் ஆறுமுகப்பாண்டி என்பவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் புழல் சிறையில் இருந்த கைதியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி கிளைச் சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, கடந்த மே 21ஆம் தேதி சிறையில் ஒப்படைத்துள்ளார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தில், திருநெல்வேலி செல்வதற்காக ஏறியுள்ளார்.பேருந்தின் நடத்துநர் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு தாம் பணியில் இருப்பதால் பயணச்சீட்டு வாங்க முடியாது என மறுத்து வாக்குவாதம் செய்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறுகின்றனர்.
அந்தக் காணொளியில் காவலர் ஆறுமுகப்பாண்டி, “ உங்கள் போக்குவரத்து பணியாளர்களுக்கு எப்படி டிக்கெட் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கிறீர்கள்? அவர்கள் பணிக்கு செல்வதாக கூறுகிறீர்கள் நானும் பணிக்கு தான் செல்கிறேன்". என்று கூறியுள்ளார்."டிக்கெட் எடுக்க முடியாது. 50 கி.மீ. தொலைவிற்குள் பயணம் செய்ய, காவலர்கள் பயணச் சீட்டு எடுக்க வேண்டிய அவசியமில்லை,” என வாக்குவாதம் செய்வதைக் காண முடிகிறது.
அதைத் தொடர்ந்து, சக பயணிகள் அவரை சமாதானம் செய்யவே காவலர் ஆறுமுகப்பாண்டி டிக்கெட் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் பேருந்து திருநெல்வேலியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. பேருந்தின் நடத்துநர் தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார், அது உடனே வைரலானது.இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது. “வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க முடியும். இல்லையென்றால், பயணச்சீட்டு வாங்க வேண்டும்” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசுப் பேருந்துகளுக்கு காவல் துறையினர் அடுத்தடுத்து அபராதம் விதித்தனர். சீட் பெல்ட் அணியாதது, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது, அதிக பயணிகளை ஏற்றியது, அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்புவது, அதிக புகை, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, அரசுப் பேருந்துகள் மீது பல இடங்களில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அரசுப்பேருந்து ஓட்டுனர்கள் சீட் பெல்ட் போடுவதில்லை என்று கூறி பல இடங்களில் காவல்துறையினர் அபராதம் விதித்த நிலையில், பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் இருப்பதே இல்லை என போக்குவரத்து கழக ஊழியர்கள் குறை கூறுகின்றனர்.கடந்த பட்ஜெட் தாக்கலின்போது கூறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 22,300 பேருந்துகள் இயங்குகின்றன.
அவற்றில் அதிகளவில் நகர பேருந்துகள் 13,000-14,000 உள்ளன. மொத்தம் உள்ள பேருந்துகளில் 2,000-3,000 பேருந்துகளில் தான் சீட் பெல்ட் இருக்கிறது. பேருந்துகளில் சீட் பெல்ட் இருக்க வேண்டும் என மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல பேருந்துகளில் சீட் பெல்ட் இல்லை.இதுதவிர, பேருந்துகளில் முதலுதவி பெட்டி, மாற்று டயர் (ஸ்டெப்னி) கூட இருப்பதில்லை என்பது போக்குவரத்து ஊழியர்களின் புகாராக உள்ளது. இப்படி போக்குவரத்து துறையில் அடுக்கடுக்காக இருக்கும் புகார்களையும் குறைகளையும் நிவர்த்தி செய்ய திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது மக்களிடம் கேள்வியாகவே உள்ளது.