Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க முடியாது உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்

ஆம்னி பஸ்களில் பண்டிகை காலகட்டணத்தை நிர்ணயிக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயிக்க முடியாது உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டம்

KarthigaBy : Karthiga

  |  22 Sep 2022 10:15 AM GMT

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டு மடங்குக்கு மேல் மேல் டிக்கெட் விலை அதிகரிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு சில நாட்களுக்கு முன்பு எழுந்தது. மேலும் ஆம்னி பஸ் டிக்கெட் கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ. அப்சல் பொருளாளர் டி.மாறன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-


கொரோனா காலகட்டத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டோம். நாடு முழுவதும் ஒரு லட்சத்து 16 கோடியும் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் 4000 ஆம்னிபஸ்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது வெறும் 1400 ஆம்னி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டு ரூ.42 க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் இன்று ரூ.94க்கு விற்கப்படுகிறது .ஒரு பஸ்சுக்கு சாலை வரி ரூ.50,000 சுங்க கட்டணம் ஒரு லட்சம் என மாதம் ஒன்றை லட்சம் செலவு ஆகிறது. இது தவிர இன்சூரன்ஸ் கட்டணம், டயர் உட்பட உதிரிபாகங்கள் விலை உயர்வு போன்றவையும் இருக்கிறது. புதிதாக ஆம்னி பஸ் வாங்கினால் 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யாக செலுத்த வேண்டியுள்ளது .


இந்த சூழ்நிலையில் ஆம்னி பஸ்களில் பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறுவது ஏற்புடையதல்ல .இதுதான் எங்களது நிரந்தர கட்டணம் ஆகும். மற்ற நாட்களில் குறைந்தபட்ச கட்டணத்தில் தான் பஸ்களை இயக்கி வருகிறோம். நாங்கள் நிர்ணயம் செய்யும் அதிகபட்ச கட்டணத்தை காட்டிலும் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்களே பரிந்துரை செய்து வருகிறோம். ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணத்தை www.toboa.in என்ற எங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. அரசு பஸ்களுக்கு அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணத்தினால் அரசு போக்குவரத்து கழகம் 48,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது .அரசு போக்குவரத்து கழகம் மக்கள் சேவை நிறுவனம் ஆகும். ஆனால் ஆம்னி பஸ் என்பது வியாபாரமாகும் .


ரயில்களில் தட்கல்,பிரீமியம் தட்கல் என்று கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. திருவிழா காலங்களில் பூஜை பொருட்கள் விலை கடுமையாக உயர்த்தி விற்கப்படுகிறது. இதனை யாரும் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் ஆம்னி பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பயணிகளிடம் தவறான கருத்து பரப்பப்படுகிறது .ஆம்னி பஸ்ஸில் பயணிக்க வாருங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை .கட்டணத்தை ஏற்றுக் கொண்டுதான் பயணிகள் வருகிறார்கள். டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே 'இந்த கட்டணத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்ற நிபந்தனையும் இருக்கிறது' .இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News