Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் என்.சி.சி மாணவர்களின் பிரம்மாண்ட பேரணி - 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

டெல்லியில் என்.சி.சி மாணவர்களின் பிரம்மாண்ட பேரணி நடந்தது . இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயம் வெளியிட்டார்.

டெல்லியில் என்.சி.சி மாணவர்களின் பிரம்மாண்ட பேரணி - 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

KarthigaBy : Karthiga

  |  29 Jan 2023 1:15 PM GMT

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களின் பிரம்மாண்ட பேரணி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த ஆண்டு என்.சி.சி அமைப்பு தொடங்கப்பட்டு 75-வது ஆண்டு என்பதால் 19 நாடுகளைச் சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் மற்றும் 196 அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள கரியப்பன் மைதானத்தில் நடந்த இந்த பேரணி மற்றும் அணிவகுப்பை பிரதமர் மோடி பார்வையிட்டார். அத்துடன் என்.சி.சி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் அவர் கண்டுகளித்தார். என்.சி.சி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சிறப்பு தபால் தலையையும் 75 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் ஒற்றுமையை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


இது இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளின் காலம் இந்தியாவின் நேரம் வந்துவிட்டது என்பது எல்லா இடங்களிலும் தெரிகிறது. இந்தியாவின் இளைஞர் பலத்தை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று நோக்கி வருகின்றன. ஆனால் நாட்டை பிளவுபடுத்த பல சாக்குப் போக்குகள் எழுப்பப்படுகின்றன. பாரத தாயின் குழந்தைகள் இடையே பிளவுகளை ஏற்படுத்த பல பிரச்சனைகள் கிளப்பப்படுகின்றன. ஆனால் அந்த சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறாது . தாய்ப்பாலில் வேற்றுமைகள் இருக்க முடியாது. இந்த சச்சரவுகளுக்கு ஒற்றுமை என்ற மந்திரமுமே இறுதி மருந்தாகும். ஒற்றுமையின் மந்திரம் இந்தியாவின் வலிமையைப் போலவே ஒரு உறுதிமொழியாகும். இதன் மூலம் மட்டுமே இந்தியா மகத்துவத்தை அடைய முடியும்.


ஸ்டார்ட்- அப்கள் பெரிய அளவில் அதிகரித்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில் தனியார் பங்களிப்பை அரசு ஊக்குவித்து வருவதால் இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன. டிஜிட்டல் புரட்சி, ஸ்டார்ட் அப் புரட்சி மற்றும் புதுமை புரட்சியை அரசு கட்டமைத்து விட்டுள்ளது. தேசிய மாணவர் படையிலும் கடந்த 10 ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை சீரான உயர்வை கண்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் என்.சி.சி இயக்குனர் குர்பிர் பால் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News