இந்திய ரயில்வேயில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியும் அவற்றில் உள்ள வசதிகளும்!
இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக மதிய மந்திரி அஸ்வினி தகவல் தெரிவித்துள்ளார்.
By : Karthiga
இந்திய ரயில்வேயில் 82 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதில்: “ஜனவரி 31 நிலவரப்படி, 82 வந்தே பாரத் ரயில்கள் இந்திய ரயில்வேயில் இயக்கப்படுகின்றன. இவை அகல ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட கட்டமைப்புக் கொண்ட மாநிலங்களை இணைக்கின்றன. இது தவிர, ரயில் சேவைகளை நிறுத்துவது, வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது ஆகியவை இந்திய ரயில்வேயில் நடந்து வரும் செயல்பாடுகளாகும். தற்போது புதுடெல்லி - மும்பை (வதோதரா - அகமதாபாத் உட்பட) மற்றும் புதுடெல்லி - ஹவுரா (கான்பூர்-லக்னோ உட்பட) வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை மணிக்கு 160 கிலோ மீட்டருக்கு அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், தானியங்கிக் கதவுகள், சாய்வு இருக்கைகள், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் சுழலும் இருக்கைகள், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் சாக்கெட்டுகள் போன்ற பயணிகள் வசதிகளுடன் தற்போது இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கவச் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :Dinakaran.com