குஜராத் : ஜி - 20 நாடுகளின் நிதி மந்திரிகள் மாநாடு-மக்களுக்கு பயன் தரும் திட்டங்களும் தகவல்களும்!
குஜராத்தில் ஜி- 20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்கள் மாநாடு நடந்தது. அதில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
By : Karthiga
ஜி- 20 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி வருகிறது. ஜி-20 தொடர்பான நிகழ்ச்சிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஜி- 20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கிகளின் கவர்னர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இது இரண்டு நாள் மாநாடாகும். மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
சர்வதேச பொருளாதார வளர்ச்சி நீண்ட கால சராசரியை விட குறைவாக உள்ளது. தொடர்ந்து ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தை சமாளிக்க ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகள் தேவைப்படுகின்றன. உணவு, எரிபொருள், பாதுகாப்பு இன்மை குறித்த சவால்கள், பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை ஜி - 20 நாடுகளின் பணிக்குழு ஆய்வு செய்தது. இதில் கிடைத்த பாடங்கள் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 'இன்று நாம் என்ன செய்கிறோமோ அதை சார்ந்துதான் எதிர்காலம் அமையும்' என்று மகாத்மா காந்தி கூறினார்.
அந்த வகையில் சர்வதேச பொருளாதாரத்தை வலிமையான நிலையான சமச்சீரான நிலையை நோக்கி வழிநடத்த நிதிமந்திரிகளாகிய நமக்கும் மத்திய வங்கிகளின் கவர்னர்களுக்கும் அதிக பொறுப்பு இருக்கிறது. உலகளாவிய சுகாதார சேவையிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி உள்ளது. ஜி - 20 அமைப்புக்கு தலைமை தாங்கும் இந்தியா மற்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE:DAILY THANTHI