ஹரியானா : நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி!
ஹரியானா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாயப்சிங்சைனி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
By : Karthiga
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா பேரவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. மாநில முதல்வராக மனோகர்லால் கட்டரும் , துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சௌதாலாவும் இருந்தனர். இந்நிலையில் ஹரியானாவில் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது .
இந்த சூழலில் முதல்வர் பதவியில் இருந்து மனோகர்லால் கட்டர் செவ்வாய்க்கிழமை விலகினார். துணை முதல்வர் சவுதாலா உட்பட 13 அமைச்சர்களும் பதவி விலகினர். இதைத் தொடர்ந்து ஹரியானா மாநில பாஜக தலைவர் மக்களவை எம்பியுமான நாயப்சிங் சைனி புதிய முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் கூட்டணி அரசியலில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலக்கப்பட்டது. இந்நிலையில் தனது தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கூறும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் சைனி புதன்கிழமை கொண்டு வந்தார்.
இத்தீ தீர்மானத்தின் மீது சுமார் 2 மணி நேரம் விவாதம் நடைபெற்றது .அதே நேரம் வாக்கெடுப்பு நடைபெறும் அவையில் இருக்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் 10 பேருக்கும் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வாக்கெடுப்பு நடைபெறும் போது கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறினர். இந்திய தேசிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ ஒருவரும் அவையில் இல்லை. நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை சட்டப்பேரவை தலைவர் ஏற்கவில்லை.
பின்னர் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் வெற்றி பெற்றது. 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா பேரவையில் தற்போது பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஜனநாயக கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும் இந்திய தேசிய லோக் தளம் ஹரியானா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.வும் ஏழு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் உள்ளனர் .பாஜக அரசுக்கு ஆறு சுயேட்சைகள் மற்றும் ஹரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளது. எனவே ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவு இல்லாமலேயே நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.
SOURCE :Dinamani