Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியும், மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்- நாடாளுமன்ற குழு பரிந்துரை

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சிபாரிசு செய்துள்ளது.

இந்தியும், மாநில மொழிகளும் பயிற்று மொழியாக இருக்க வேண்டும்- நாடாளுமன்ற குழு பரிந்துரை

KarthigaBy : Karthiga

  |  10 Oct 2022 6:45 AM GMT

அலுவல் மொழிச் சட்டம் 1963 இன் கீழ் கடந்த 1976 ஆம் ஆண்டு அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது.அதில் மக்களவையைச் சேர்ந்த 20 எம்.பி.க்களும் மாநிலங்களவையைச் சேர்ந்த 10 எம்.பி க்களும் இடம் பெறுவார்கள். இந்தி மொழி பயன்பாட்டில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து ஆண்டுக்கு ஒருமுறை இக்குழு ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். தற்போது இக்குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் இந்த குழு தனது பதினோராவது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தது.அதில் பரபரப்பான சிபாரிசுகளை செய்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இந்தி மொழி பயன்பாடு அடிப்படையில் மாநிலங்கள் ஏ,பி,சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இந்தி மொழி பயன்பாடு அதிகமாக உள்ள உத்தர பிரதேசம், பீகார் உட்பட 11 மாநிலங்கள் ஏ பிரிவிலும் மிதமான பயன்பாடு கொண்ட குஜராத் மராட்டியம் உட்பட ஆறு மாநிலங்கள் பி பிரிவிலும் இந்தி பேசாத இதர மாநிலங்கள் சி பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன. இந்தி பேசும் ஏ பிரிவு மாநிலங்களில் ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்பம் சார்ந்த, தொழில்நுட்பம் சாராத உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் விருப்பமொழியாக மட்டுமே இருக்க வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்கள் கேந்திரிய வித்யாலயாக்கள் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.


எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலத்தை விட அந்த அந்தந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .ஏ பிரிவு மாநிலங்களில் இந்திக்கு மதிப்புக்குரிய இடம் அளிக்கப்பட வேண்டும். அங்கு இந்தியின் பயன்பாடு 100 சதவீதம் இருக்க வேண்டும்.ஐ.நாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் ஆங்கில கேள்வித்தாள் கட்டாயம் இடம் பெறுவதை நிறுத்த வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் ஹைகோர்ட் தீர்ப்புகளை இந்தியில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஊழியர்கள் யாராவது வேண்டும் என்றே இந்தியில் பணியாற்றாமல் இருந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் .அதன் பிறகும் அவர்கள் அது போன்று இருந்தால் அவர்களின் திறன் மதிப்பீட்டு அறிக்கையில் அதை குறிப்பிட வேண்டும்.


மத்திய அமைச்சகங்கள், துறைகள் அலுவலகங்கள் ஆகியவற்றின் கடிதம் மின்னஞ்சல் தொலைநகல் ஆகியவை இந்ததி அல்லது மாநில மொழிகளில் இருக்க வேண்டும். எளிமையான சொற்களை பயன்படுத்த வேண்டும் மத்திய அரசு நடத்தும் நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்கள், பேச்சுகள், தொகுப்புரை ஆகியவை இந்தி அல்லது மாநில மொழிகளில் இருக்க வேண்டும். இவ்வாறு அந்த குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவரான பிஜு ஜனதா தளம் எம்.பி பார்த்ருஹரி மகதாப் கூறியதாவது :-


பயிற்று மொழி இந்திய அல்லது மாநில மொழிகளாக இருக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிபாரிசுகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் என்பது அந்நிய மொழிி காலனி ஆதிக்க வழக்கத்தை ஒழிக்கும் வகையில் ஆங்கிலத்தை நாம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ரீடா பகுகுணா ஜோஷி, சுசில்குமார் குப்தா ஆகிய குழு உறுப்பினர்களும் இதே கருத்தை தெரிவித்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News