உண்டியலை உடைத்து கோவில் பணம் திருட்டு- தொடரும் அட்டூழியம்!
By : Shiva
கும்பாபிஷேகம் நடந்தது 20 நாட்களே ஆன அய்யனார் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே வீரசிங்கன் குப்பத்தில் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அப்பகுதியைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவர் இருந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கோவிலில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கோவிலைத் திறந்த அய்யாக்கண்ணுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
கோவிலில் கிரில் கம்பிகளுக்கு நடுவில் கட்டியிருந்த உண்டியலை மர்ம நபர்கள் வெளியில் இருந்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து கோவில் தர்மகர்த்தா அய்யாகண்ணு முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி டி.எஸ்.பி., சபியுல்லா, முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்கு பதிந்து தடயங்களை சேகரித்தனர்.கோவில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்ம நபர்களை உடனடியாகக் கைது செய்து அவர்களிடமிருந்து கோவில் பணத்தை மீட்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நன்றி : தினமலர்