கோவில் அருகே பிணத்தைப் புதைத்து மதப் பிரச்சாரம்?- செஞ்சிக்கோட்டையில் அதிர்ச்சி !
By : Shiva
செஞ்சிக்கோட்டை மலையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் மதப் பிரச்சாரம் செய்ததாக இந்து முன்னணியினர் புகார் அளித்ததை அடுத்து மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் பின் உள்ள மலைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் பிணத்தைப் புதைத்தாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
800 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த செஞ்சிக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதியிலும் பல கோவில்கள் உள்ளன. ஆங்கிலேயர் மற்றும் மொகலாயர் படையெடுப்புகளின் போது இந்தக் கோவில்கள் தாக்கப்பட்டதால் பலவற்றில் தற்போது வழிபாடு இல்லை. பழமையான நினைவுச்சின்னம் என்பதால் செஞ்சிக்கோட்டை மலைப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து அமைப்புகள் கோவில்களை மீண்டும் வழிபாட்டை தொடர அனுமதி கோரி வந்த போதும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
கோட்டைக்குள் உள்ள கோவில்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்தாலும் மலையடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு தொடர்ந்து வருவதோடு அடிக்கடி பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலின் பின்புறம் உள்ள மலைப் பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிகள் சிலர் பிணத்தை புதைத்து வைத்து ஜெபம் செய்ததாக இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும் மலையின் பல பகுதிகளில் "ஏசு அழைக்கின்றாா்" என்று எழுதி வைத்தும், சிலுவை சின்னத்தை வரைந்து வைத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள மண்டபத்தில் ஒலி பெருக்கி மூலம் ஜெபம் செய்து கோவிலுக்கு வருபவா்களிடம் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக சென்னையை சோ்ந்த மிஷனரிகள் மீது புகார் அளித்ததை அடுத்து 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நல்லுார் பகுதியைச் சேர்ந்த சாத்ரக் மற்றும் எலிசா ஆகிய கிறிஸ்தவ மத போதகர்களின் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் இந்த மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்துக் கோவிலில் மதப் பிரச்சாரம் செய்ததற்காகவும் தொல்லியியல் துறையின் கீழ் உள்ள கோட்டையை சேதப்படுத்தியதற்காகவும் இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் செஞ்சி காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். கோட்டையில் அத்துமீறி வாசகங்கள் மற்றும் சிலுவை வரைந்ததற்காக செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறையிலும் புகாா் அளித்துள்ளனா்.
Image Courtesy: Dinamalar