தொடர் தோல்விகளா? யாருக்கு செய்ய வேண்டும் இறுதி சடங்கு?
தொடர் தோல்விகளா? யாருக்கு செய்ய வேண்டும் இறுதி சடங்கு?

தான் மேற்கொண்ட முயற்சிகளில் பெரும்பாலும் தோல்வியுற்றதில் துவண்டுவிட்ட மனிதர் ஒருவர், அவர் வாழும் பகுதியில் அனைவராலும் போற்றப்படும் ஞானி ஒருவரை சந்தித்தார். தன்னுடைய தோல்விகளின் காரணத்தையும் அதிலிருந்து விடுபடும் வழியையும் கேட்டார். அதற்கு அந்த ஞானி, "உன்னுடைய தோல்விகளுக்கு காரணமாக உனக்கு ஒரு விரோதியிருக்கிறான். அவனை நான் பார்த்து கொள்கிறேன். நீ நாளை வா" என்றார்.
அவர் வார்த்தைகளின் படி, அடுத்த நாள் அந்த ஞானியை மீண்டும் சந்தித்தார் அம்மனிதர். அவரிடம் ஞானி, "இத்தனை நாளும் உன் தோல்விகளுக்கு காரணமாக இருந்த உன் எதிரியை நான் கொன்று வீழ்த்தி விட்டேன். அவனை அதோ அந்த சவப்பெட்டியில் வைத்திருக்கிறேன். நீ விரும்பினால் போய் பார் என்றார்"
அதிர்ந்து போன மனிதர், ஒரு வித அச்சத்துடனுடம், தன் வளர்ச்சியை தடை செய்து வந்த மனிதரை தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலும் அந்த சவப்பெட்டியை நெருங்கினார். அந்த பெட்டியினுள் மிக துல்லியமாக தெரிந்த தன் முகத்தை கண்டு அவருக்கு மேலும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் பெருகியது. சவப்பெட்டிக்குள் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து தன் முகத்தை தனக்கே காட்ட வேண்டிய அவசியம் என்ன? என கொந்தளித்தார் அம்மனிதர்.
அதற்கு ஞானி சொன்னார், "இந்த உலகத்தில் உன் வெற்றிகளை தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்ற ஒரே மனிதன் நீ மட்டும் தான். உன் வாழ்க்கையை சீர்த்திருத்த கூடிய ஒரே மனிதனும் நீ தான். உன் முதலாளி, உன் தொழில், உன் நண்பர்கள், உன் பெற்றோர், உன் துணைவர் என எவர் மாறினாலும் உன் வாழ்க்கை மாறப்போவது இல்லை. என்று நீ மாறுகிறாயோ அன்று மட்டுமே உன் வாழ்க்கை மாறும். உன் தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கு நீ மட்டுமே காரணம். என்று உனக்கு ஏற்படும் அனைத்திற்க்கும் நீ மட்டுமே பொறுப்பு என்பதை உணர்கிறாயோ அந்த கணம் உனக்குள் புதிய உத்வேகம் பிறக்கும். நீ தொலைத்து விட்ட்தாக என்னும் பாதைக்கு வழி கிடைக்கும். தோல்வியுற்றதாக கருதும் செயலினுள் வெற்றியின் வெளிச்சம் துளிர்க்கும்.
எனவே உன்னை நீயே பரிசோதித்து கொள், உன்னை உனக்குள்ளே ஆழ்ந்து கவனி. எதையெல்லாம் கடினம், இயலாது, முடியாது என கருதுகிறாயோ அத்தனைக்குமான பதிலை உன்னுள் இருந்தே பெறுவாய். அந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த்து உன் முகம் அல்ல, உன் தடைகள், உனக்குள் நீ வகுத்து கொண்ட தேவையற்ற எல்லைகள். அவைகளுக்கான இறுதி சடங்கினை செய்துவிட்டு உன்னுள் இருக்கும் அலப்பரியா அற்றலை மட்டுமே உன்னுடன் சுமந்து செல். உன் இலக்கின் தூரம் குறைவதை உணர்வாய்.