Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் நிலத்தை சர்ச்சுக்கு தாரை வார்த்த அறநிலையத்துறை அலுவலர் !

கோவில் நிலத்தை சர்ச்சுக்கு தாரை வார்த்த அறநிலையத்துறை அலுவலர் !

ShivaBy : Shiva

  |  29 Sep 2021 12:16 AM GMT

நெல்லை மாவட்டத்தில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சர்ச் கட்ட தாரைவார்த்த செயல் அலுவலர் இந்து முன்னணியின் கடும் எதிர்ப்புக்குப் பின் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கிறிஸ்தவர்களின் தீவிர மதமாற்ற செயல்பாடுகளால் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வேலுச்சாமி என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு அறநிலையத் துறை செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். அந்த கால கட்டத்தில் கோவில் சொத்துக்களை கிறிஸ்தவர்கள் சட்ட விரோதமாக அனுபவிக்க அனுமதித்ததாக இவர் மீது புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை கீரனூர் பகவதி அம்மன் கோவிலில் பணி புரிந்து வந்தார். வள்ளியூர் முருகன் கோவில் சுபாஷினி என்ற அலுவலர் நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாக செயல்பட்டு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்ட விரோதமாக செயல்பட்ட தனியார் கனிம நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு கோவில் சொத்துக்களை மீட்டார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கையும் எடுத்து வந்தார்‌.

இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முறைகேடு ஆசாமி வேலுச்சாமி விருப்ப இடத்திற்கு இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் முறைகேடு புகாரால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட வள்ளியூர் முருகன் கோவிலுக்கே மீண்டும் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் சபாநாயகர் அப்பாவும் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக முக்கிய புள்ளிகளின் உதவியுடன் வேலுச்சாமி கோவில் நிலங்களை கிறிஸ்தவர்களுக்கு தாரைவார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

வேலுச்சாமி தன் பணிக்காலத்தில் 1919ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் கோவிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அபகரிக்க முயன்ற கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிறிஸ்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், "ஒரு கிறிஸ்துவர், ஹிந்து கோவிலுக்கு அக்தார் ஆக முடியாது. ஆனால், அவர் அக்தார் ஆகலாம் என தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய கோவில் செயல் அலுவலர் வேலுச்சாமி, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தன் பதவிக்கு உகந்தவராக நடந்து கொள்ளவில்லை" என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. நீதிமன்ற உத்தரவிற்கு பின் அந்த நிலம் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேலுச்சாமி வள்ளியூரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது மீண்டும் வள்ளியூர் முருகன் கோவிலுக்கே மாறுதல் பெற்று கொண்டு வந்துள்ள வேலுச்சாமி மீண்டும் கோவில் சொத்துக்களை கிறிஸ்தவர்களுக்கு தாரை வார்க்க தொடங்கியுள்ளதாக அவர் பணியில் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னர் இந்து முன்னணி முயற்சியால் கோவில் நிலத்தில் சர்ச் கட்டும் பணிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வேலுச்சாமி நியமிக்கப்பட்ட பின்னர் சர்ச் கட்டுமானப் பணிகளைத் தொடர அனுமதித்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

கிறிஸ்தவரான இன்னாசிமுத்து என்பவரின் மகள் லில்லி கோவில் பிரகாரத்தில் உள்ள 7 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதற்கு எதிராக முன்னர் செயல் அலுவலராக இருந்த சுபாஷினி வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேர்மையாகச் செயல்பட்ட சுபாஷினியை மாற்றிவிட்டு வேலுச்சாமி நியமிக்கப்பட்டார்.

வேலுச்சாமி, தான் பொறுப்பேற்ற நாளிலேயே தான் ஒரு அமைதிக்கூட்டம் நடத்தியதாகவும், நிலத்தை ஆக்கிரமித்துள்ள இன்னாசிமுத்து மகள் லில்லி ₹.2 லட்சம் செலுத்திவிட்டதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்றும் வள்ளியூர் காவல் நிலையத்தில் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இதை அறிந்த இந்து முன்னணியினர் வேலுச்சாமி நியமனத்தை கடுமையாக எதிர்த்தது தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News