சுய உதவிக் குழு மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதியாக மாற்ற விரும்புகிறேன்- பிரதமர் மோடி!
சுய உதவி குழுக்களில் உள்ள இரண்டு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றுவது எனது கனவு என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
மத்திய பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் 'விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா' ஒரு பகுதியாக பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசுகையில் நாடு முழுவதும் 'சுய உதவி குழுக்களில் உள்ள 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற விரும்புவதே எனது கனவு' என்றார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரூபினா கான் என்ற பெண்ணை நோக்கி எனது இந்த முயற்சிக்கு உதவி செய்வீர்களா? உங்களது குழுவில் எத்தனை பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற விரும்புகிறீர்கள் என்று பிரதமர் மோடி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ரூபினா கான் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதியாக மாற்ற விரும்புகிறேன் என்றார். மோடி இது ஒரு அரசியல் பதில் என்றார். இதை கேட்டு அங்கிருந்து அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் லட்சாதிபதியாக விரும்புபவர்கள் கைகளை உயர்த்துமாறு மோடி கூறினாரர்.இதற்கு அங்கிருந்து பெண்கள் அனைவரும் கைஉயர்த்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மோடி உங்களுக்காக பல திட்டங்கள் உள்ளன. எனது முயற்சிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
இதை அடுத்து பேசிய ரூபினாகான் நான் சுய உதவி குழுவில் சேர்ந்து ஐந்தாயிரம் கடன் பெற்று துணி வியாபாரத்தை தொடங்கினேன். முதலில் வீட்டில் இருந்தபடியே வியாபாரத்தை நடத்தினேன். பின்னர் எனது கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று துணிகளை விற்று வந்தேன். தொழில் நன்றாக நடைபெற்றதால் நானும் எனது கணவரும் வேன் ஒன்றை வாங்கினோம். என்றார் .அவர் கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி என்னிடம் சைக்கிள் கூட இல்லாத நிலையில் நீங்கள் வேன் வைத்திருக்கிறீர்கள் என்றார்.
தொடர்ந்து பேசிய ரூபினாகான் எனது தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கடை எடுத்து வருகிறேன். கிளஸ்டர் ரிசோர்ஸ் பர்சன் என்ற முறையில் நானும் எனது குழுவில் உள்ள பெண்களும் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய தகவல்களை பெற்று வருகிறோம். தேவாஸ் மாவட்டத்தில் 40 கிராமங்களில் சுய உதவி குழுக்களை உருவாக்கி உள்ளேன். கொரோனா காலத்தில் முக கவசம் சானிடைசர் ஆகியவற்றை சுய உதவி குழுக்கள் மூலம் தயாரித்தோம். அதன் மூலம் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சம்பாதித்தோம் என்று கூறினார்.
இதைக் கேட்ட பிரதமர் மோடி ரூபினாவின் குழந்தைகளை பற்றியும் அவர்களது கல்வி பற்றியும் கேட்டார். இதற்கு பதில் அளித்த ரூபினா கான் எனக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் . மகள்கள் இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளனர். மகனுக்கு தொழில் தொடங்க வாகனம் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளேன். என்றார் தாயின் தன்னம்பிக்கையை பாராட்டிய பிரதமர் மோடி உங்கள் குழந்தைகளை மேலும் படிக்க வையுங்கள் . பெண்களின் இந்த தன்னம்பிக்கை மட்டுமே நாட்டை சுயசார்பு நாடாக மாற்றும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மத்திய பிரதேசம் முதல் மந்திரி மோகன் யாதவ் போபாலில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.
SOURCE :DAILY THANTHI