மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவு மீட்கப்படுவது உறுதி- அண்ணாமலை!
பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும் போது கச்சத்தீவு மீட்கப்படும் என்று தமிழக பாஜக தலைவரும் அக்கட்சியின் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறினார்.
By : Karthiga
பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:-
பெரிய மாற்றத்திற்காக அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். கோவை மக்களவை தொகுதியில் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் களத்தில் நிற்கிறேன். இலவசமாக குழாய் மூலம் குடிநீர் வரவேண்டும் என்பது அனைவரது கனவு. இதற்கு பிரதமர் மோடியின் பிரதிநிதி இல்லாததே காரணம். ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஒரு அலுவலகம் அமைத்து இ சேவை மைய வசதி ஏற்படுத்தப்படும் .
மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு தற்போது ரூபாய் 319 ஊதியம் வழங்கப்படுகிறது. மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் இது 500 ஆக உயர்த்தப்படும் .வாக்கு பணம் கொடுக்க மாட்டேன் .ஒரு மனிதனை மலிவு படுத்தி வாக்கு பெறக் கூடாது. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது,
1974 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மூலம் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தனர். முதலில் இந்திய மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை கச்சத்தீவில் உலர்த்திக் கொள்ளலாம் என்று ஒரு ஷரத்து இருந்தது. பின்னர் அதனை நீக்கிவிட்டனர்.கச்ச தீவை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் அப்போதைய முதல்வர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளனர் .மோடி ஆட்சி மீண்டும் அமையும் போது கச்சத்தீவை மீட்போம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
SOURCE :Dinaseithi