வேட்டைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்துவிடும் - எச்சரித்த நீதிமன்றம்!
புலிகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்து விடும் என்று சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை செய்துள்ளது.

தமிழ்நாடு வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுப்பது தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என். சதீஷ்குமார் கொண்ட சிறப்பு டிவிஷன் பெஞ்சு விசாரித்து வருகிறது . இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது . அப்போது சத்தியமங்கலத்தில் 5 புலிகள் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டு உள்ளன. இந்த புலிகளை கொன்றவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன் புலிகள் வேட்டையில் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இது குறித்து விசாரிக்க புலன் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய அரசின் வனவிலங்கு வேட்டை தடுப்பு பிரிவு அதிகாரிகளும் இதுகுறித்து தனியாக விசாரித்து வருகின்றனர் என்று கூறினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஐந்து புலிகள் வேட்டையாடிய வழக்கில் கைதானவர்களை சாதாரண வழக்கில் கைதானவர்கள் போல கருதக்கூடாது. அவர்களை குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டுக்கு சிறையில் அடைக்கும் சத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை அரசு ஆராய வேண்டும்.
இதுபோல சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் புலிகள் இனம் அழிந்துவிடும். இந்த மாநிலத்தில் புலிகளை இல்லை என்ற ஒரு அபாயமான நிலை ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கை செய்து வழக்கு ஏப்ரல் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.