சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்? இந்நாளில் நாம் நினைவுக்கூற வேண்டியது என்ன?
சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்? இந்நாளில் நாம் நினைவுக்கூற வேண்டியது என்ன?

By : Kathir Webdesk
இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள் சுதந்திர தினம். நம் சுதந்திர போராட்ட வீரர்களின் நெஞ்சுரத்தையும், வீரத்தையும் போற்றும் வீரத் திருநாள். 200 ஆண்டுகளுக்கு மேலாக அடிமை பட்டு கிடந்த தேசம் இந்த நாளில் தான் அதன் புதிய சரித்திரத்தை துவங்கியது. எத்தனையோ இருண்ட விடியல்களுக்கு மத்தியில் வெளிச்சம் பரப்பும் புது விடியலாக ஆகஸ்ட் 15, 1947 அமைந்தது.
இது நமக்கு மிக எளிமையாக கிடைத்து விட்ட ஒன்றல்ல. இந்த ஒற்றை நாளின் பின் பெரும் வலி மிகுந்த, தீவிர தேசப்பற்று நிறைந்த பல கதைகள் உண்டு, பல வீர வரலாறு உண்டு. ஆயிரக்கணக்கான வீரர்களின் சொல்லிலடங்காத தியாகம் இருக்கிறது. டெல்லி கோட்டையில் பட்டொளி வீசி இந்த கொடி பறக்கிற போதெல்லாம் இந்தியாவின் திசையெங்கிலும் இருக்கிற இந்தியர்கள் கொண்டாட்டத்திலும் ஆனந்தத்திலும் பூரிக்கிறார்கள்.
இந்த நாள் நமக்கு தருகிற பல செய்திகளில் முக்கியமான செய்தி என்னவெனில், ஒரு நாடு அதன் பகைவர்களை வெற்றிகொள்ளும் யுத்திகளில் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது ஒற்றுமை. அந்த வகையில் ஒற்றுமை ஒன்றையே கூர் ஆயுதமாக கொண்டே நாம் இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். மத, மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் என பல பாகுபாடுகளை கடந்து உண்மை, அன்பு மற்றும் நிதி ஆகியவை நிலைத்திருத்தப்படும் போது ஒற்றுமை இயல்பாகவே நம்மிடையே மலரும்.
ஒரு சாம்ராஜ்ஜியத்திடம் அடிமைப்பட்டு கிடக்கும் வலியென்ன என்பதை அறிய வேண்டுமெனில், நம் இல்லங்களில் இருக்கும் 1947 க்கு முன்பாக பிறந்த மூத்தவர்களை கேட்டு பாருங்கள். பெரும் மலையை நகர்த்துகிற அழுத்தத்தை அன்றைய ஒவ்வொரு இந்தியரும் அனுபவித்திருப்பார்கள். அந்த கடினமான காலங்களை, நம் முன்னோர்கள் அனுபவித்த வலியை மிக எளிதாக நம் நினைவில் இருந்து நாம் அகற்றி விடக்கூடாது.
எனவே சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது நம் தலைவர்களை நினைவு கூர்வது மிக மிக அவசியமான ஓன்று. அம்பேத்கர் மிக நீண்ட அரசியலம்மைப்பினை உருவாக்கித் தந்தார். மகாத்மா காந்தி அஹிம்சையை நமக்கு கற்று தந்தார். நேதாஜி அவர்கள் நம்மிடத்திலே பெரும் தைரியத்தை ஊட்டினார். ஆனால் இந்த தலைவர்களால் மட்டுமே ஆனதல்ல இந்தியா. இவர்களை போலவே ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், தெருக்கள் தோறும் சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் நாளாக இந்நாள் இருக்க வேண்டும்.
இந்த தாய் நாட்டை குறித்து பெருமை கொள்ளும் நாள் இது. தேசபற்றுடன் உயிர் துறந்த தியாகிகள் நிறைந்த பூமி, மொத்த உலகத்தையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பாரம்பரியம் நம்மிடம் உண்டு. தனித்துவமிக்க கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம். பன்முகத்தன்மையிலும் ஒற்றுமையை கண்டவர்கள் நாம். இந்த உலகிற்கு அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதித்தவர்கள் நாம். எனவே இந்த தியாக திருநாளை போற்றி வணங்கி கொண்டாடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. அறியாமை மற்றும் வறுமை என்னும் பேரிருளை அகற்ற உறுதியெடுப்போம். வெளிச்சம் இல்லாத போது தான் இருள் நம்மை ஆட்சி செய்யும். எப்போது தீர்வுகளை ஒதுக்குகிறோமோ அப்போது தான் பிரச்சனைகள் நம்மை சூழ்ந்திருக்கும். அதனால் தான் காந்தி சொன்னார், நீங்கள் எந்த மாற்றத்தை காண விரும்புகிறீர்களோ, அந்த மாற்றத்தை உங்களிடமிருந்தே துவங்குங்கள். புதிய இந்தியா படைப்போம்!! அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
