அமெரிக்காவில் நடைபெறும் ஹவுடி மோடி மாநாட்டை சீர்குலைக்க இம்ரான் கானின் கட்சி சதித்திட்டம் : உளவுத்துறை ரகசிய தகவல்கள்
அமெரிக்காவில் நடைபெறும் ஹவுடி மோடி மாநாட்டை சீர்குலைக்க இம்ரான் கானின் கட்சி சதித்திட்டம் : உளவுத்துறை ரகசிய தகவல்கள்
By : Kathir Webdesk
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அரசு முறை பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு புது டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் வருகிற 27 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹெளஸ்டன் நகரில் ஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த 50,000 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் அவர்கள் முன் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த நிலையில், ஹவுடி-மோடி நிகழ்ச்சியை சீர்குலைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளது. தி சண்டே கார்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) ஆகியவை ஹவுடி-மோடி நிகழ்ச்சியை சீர்குலைக்க நேரடியாக களமிறங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி சண்டே கார்டியன் வெளியிட்டுள்ள ரகசிய தகவல்கள்:
1) பர்தா உடையணிந்த பெண்களுக்கு, போராட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் போராட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள பதாகைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) கொடிகளும் உள்ளன.
2) போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவரான “ஃபயாஸ் கலீல்” என்பவரின் முகநூல் பக்கத்தில், இம்ரான் கானின் அரசியல் கட்சியான பி.டி.ஐ.யின் நிறுவன உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். பெஷாவரைச் சேர்ந்த இவர், இம்ரான் கானுடன் குறைந்தது பத்து வருட காலத்திற்குள் பல புகைப்படங்களில் காணப்படுகிறார். அவரது முகநூல் இடுகைகளில் ஒன்று கூறுகிறது, “போராட்டக்காரர்களை என்.ஆர்.ஜி ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பல டீலக்ஸ் கோச் பேருந்துகள் 2019 செப்டம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணிக்கு திரும்பும்", என்று குறிப்பிடிபட்டுள்ளது.
3) என்.ஆர்.ஜி அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடம், போராட்டக்காரர்கள் எங்கு நின்று போராட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பான்கள்.
4) ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டுள்ள மோடியின் புகைப்படங்கள் மற்றும் மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பொருட்கள்.
5) மோடி எதிர்ப்பு பதாகைகளைக் கொண்ட காலிஸ்தானி தீவிரவாதிகளின் புகைப்படங்கள். இந்த காலிஸ்தானிய தீவிரவாதிகளை வைத்துக்கொண்டு பாகிஸ்தான் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை உயர்த்தப் பயன்படுத்தும் என்பதை நிரூபிக்கிறது. பாகிஸ்தானின் “கே 2” திட்டத்தின் ஒரு பகுதியாக காலிஸ்தானி தீவிரவாதிகள் உள்ளனர். கே 1 என்பது பாகிஸ்தானின் காஷ்மீர் திட்டமாகும்.
6) ஹவுடி-மோடி நிகழ்ச்சியின் தேதி, நேரம் மற்றும் இருப்பிடம் பற்றிய விளக்கத்துடன் ஒரு தனி வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது ! போராட்டக்காரர்கள் தங்களை பதிவு செய்துகொள்ள இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
7) மோடி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இந்த போராட்டத்திற்கு நன்கொடை அளிக்க பாகிஸ்தானியர்களால் உருவாக்கப்பட்ட போலி பேஸ்புக் மற்றும் வலைப்பக்கங்களுக்கான ஆதாரங்களையும் உளவுத்துறை ஏஜென்சிகள் சேகரித்துள்ளன என்று தி சண்டே கார்டியன் மேலும் தெரிவித்துள்ளது.