Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட இ- சேவை மைய ஊழியர்கள் இரண்டு பேர் பணி நீக்கம்

முறைகேட்டில் ஈடுபட்ட அரசு இ- சேவை மைய ஊழியர்கள் இரண்டு பேரை பணி நீக்கம் செய்து மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் நடவடிக்கை எடுத்தார்.

மதுரையில் முறைகேட்டில் ஈடுபட்ட இ- சேவை மைய ஊழியர்கள் இரண்டு பேர் பணி நீக்கம்

KarthigaBy : Karthiga

  |  20 Oct 2022 11:00 AM GMT

மதுரை கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது அவர் இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தினார். அந்த மையத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடைக்காரருடன் இணைந்து முறைகேடாக அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கலெக்டர் இரண்டு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும் ஜெராக்ஸ் கடைக்காரர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஊழியர்களும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் ஆவார்கள்.இது குறித்து கலெக்டர் அனிஷ்சேகர் கூறியதாவது:-


மதுரை மாவட்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்கள்,ஜெராக்ஸ் கடைகள் ஆகியவை அரசு அனுமதி பெறாமல் இ- சேவை மையங்களை நடத்தி வருவதாக புகார் வந்துள்ளன. இவர்கள் அரசின் இ- சேவை இணையதளத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய திட்டங்கள் சார்ந்த விண்ணப்பங்கள் மற்றும் பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்கின்றனர் . அதற்கு கூடுதல் கட்டணம் பெற்றுக் கொள்வதாக தெரிகிறது இது போன்ற புகார்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தனியார் மையங்களில் அரசின் சேவைகள் வழங்கப்படும் என அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது. அதேபோல அரசு இ- சேவை மையங்களில் வருவாய்துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ.60-ம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் இடைத்தரவுகளை தவிர்த்து அருகில் உள்ள தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், கூட்டுறவு சங்க இ சேவை மையங்கள், மகளிர்திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ - சேவை மையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற இ - சேவை மையங்களை மட்டுமே அணுக வேண்டும் .அரசு நிர்ணயத்தை கட்டணத்தை தவிர அதிக கட்டணம் பெறும் இ சேவை மையங்கள் பற்றிய புகார்களுக்கு tnesevaihelpdesk.tn.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1100 மற்றும் 18004251333 மூலமாகவோ இவர்களை தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News