Kathir News
Begin typing your search above and press return to search.

கடத்தப்பட்ட கப்பலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை-ஐ.என்.எஸ்.அதிரடி சாதனை!

சோமாலியா கடலில் கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.

கடத்தப்பட்ட கப்பலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை-ஐ.என்.எஸ்.அதிரடி சாதனை!
X

KarthigaBy : Karthiga

  |  6 Jan 2024 8:30 AM GMT

வடக்கு அரபிக் கடலில் சோமாலியா அருகே இந்தியா்களுடன் வியாழக்கிழமை கடத்தப்பட்ட ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை கப்பலில் கமாண்டோ படையினா் சென்று அதிரடியாக மீட்டனா்.கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 15 இந்தியா்கள் உள்பட 21 பணியாளா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.அதிநவீன கடலோர ரோந்து விமானம், ஹெலிகாப்டா், ட்ரோன்களை இந்திய கடற்படை பயன்படுத்தி கப்பலை அதிரடியாக மீட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மாத்வால் தெரிவிக்கையில், ‘சோமாலியா அருகே லைபீரியா கொடியுடன் பயணித்த ‘எம்.வி.லிலா நாா்ஃபோக்’ சரக்குக் கப்பலை 5 முதல் 6 கடற்கொள்ளையா்கள் உள்ளே புகுந்து கடத்தியதாக வியாழக்கிழமை மாலை பிரிட்டன் ராணுவத்தின் கடல்சாா் வா்த்தகப் பிரிவுக்கு கப்பலில் இருந்து அவசர தகவல் கிடைத்தது.


இந்தத் தகவல் இந்தியாவுடன் பகிரப்பட்டவுடன், கப்பலை மீட்பதற்காக ‘ஐஎன்எஸ் சென்னை’ போா்க் கப்பல், பி-8ஐ நவீன கடலோர ரோந்து விமானம், எம்.கியூ.9பி ஆளில்லா விமானத்தை இந்திய கடற்படை உடனடியாக அனுப்பியது. கடற்படை ரோந்து விமானம் பி-8ஐ வெள்ளிக்கிழமை காலை கப்பலை நெருங்கி தொடா்பை ஏற்படுத்தியது. ‘ஐஎன்எஸ் சென்னை’ போா்க் கப்பலில் சென்ற கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலை வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு இடைமறித்தனா்.

கடத்தப்பட்ட கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோக்கள் உள்ளே இருந்த 15 இந்தியா்கள் உள்பட 21 கப்பல் பணியாளா்களை பாதுகாப்பாக மீட்டனா். கப்பலுக்குள் நடத்திய சோதனையில் கடற்கொள்ளையா்கள் தப்பியது தெரியவந்தது. இந்திய கடற்படை ரோந்து விமானம் விடுத்த கடுமையான எச்சரிக்கையையடுத்து கடற்கொள்ளையா்கள் தப்பி இருக்கலாம். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 21 பேரும் நலமாக உள்ளனா்’ என்றாா்.

இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சா்வதேச கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து அந்தப் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடல், ஏடன் வளைகுடாவின் கடல்சாா் பாதுகாப்பை இந்திய கடற்படை தொடா்ந்து கண்காணிக்கும். அங்கு இந்திய கடற்படையின் கப்பல்கள், விமானங்கள் தொடா்ந்து கண்காணிப்பில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு பதிலடியாகவும், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாகவும் யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். கடந்த மாதம் இந்தியா நோக்கி வந்த இரு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்தத் தாக்குதல்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏனெனில் இவ்வாறான தாக்குதல்கள் சர்வதேச கடல்வழிப் பாதைகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். இந்தத் தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், “இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய சக்தி சில சக்திகளைப் பொறாமையால் நிரப்பியுள்ளது. சமீபத்தில் அரபிக் கடலில் எம்வி கெம் புளூட்டோ கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதையும், சில நாட்களுக்கு முன்பு செங்கடலில் எம்வி சாய்பாபா மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கடலுக்கு அடியில் இருந்தாலும்கூட கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்,” என்று தெரிவித்தார்.


SOURCE : BBCnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News