பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்திய பொருளாதாரம் மென்மேலும் வளரும் நிலையிலேயே உள்ளது- தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்
ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று மத்திய நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறினார்.

By : Karthiga
சென்னை எழும்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எப்.ஐ.சி.சி.ஐ அமைப்பு சார்பில் தொழிலதிபர்களுக்கான சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் ஆற்றிய முக்கிய உரை வருமாறு :-
2022-23 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி மேலும் உயர வாய்ப்புள்ளது . இதற்கு முந்தைய ஆண்டு பொருளாதார வளர்ச்சியின் நிலை 9.1% . கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மற்ற நாடுகள் போல நமது நாடும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது . ஆனால் மற்ற நாடுகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருந்தது என்றால் அந்த நிலையை சமாளிக்க அரசின் செலவையோ மத்திய வங்கியின் வட்டி விகிதத்தையோ பணப்புழக்கத்தையோ கட்டுப்பாடு இல்லாமல் அதிகரிக்கவில்லை.
முன்னெச்சரிக்கையுடன் எந்த மக்களுக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டும் உதவிகளை அளிப்பதற்காக இலக்கை நிர்ணயத்தை நிதானத்துடன் செயல்பட்டோம். இன்றுள்ள விலைவாசி உயர்வு அரசு நிதிநிலை ஆகியவற்றை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்திய பொருளாதாரம் நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளது. இந்த ஆரோக்கியமான நிலைதான் வரும் ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள வங்கிகள் பெரு நிறுவனங்கள் போன்றவை 2011- 2020க்கு முந்தைய 10 ஆண்டுகளில் மிக அதிகமாக முதலீடு செய்தன. அதிகமாக கடன்களை வழங்கின. இதனால் எழுந்த பிரச்சனைகளை சமாளிக்க கடந்த 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால் இன்றைய நிலவரப்படி வங்கிகளின் முதலீடு அதிகரித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களின் கடன் நிலவரமும் முன்பிருந்ததை விட குறைந்துள்ளது . இந்தியாவை பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பொருளியல் சீர்திருத்தங்கள், கொரோனா காலகட்டத்தில் செய்த மிதமான செலவுகள் , மத்திய வங்கிகளின் நிதிநிலைமை மற்றும் செயல்பாடுகள் பெரு நிறுவனங்களின் நிதி நிலைமை, டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றை மொத்தமாக கணக்கிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை உதவிகரமாக இருக்கும்.
இதனால் இனிவரும் எட்டு ஆண்டுகளில் நமது பொருளாதார வளர்ச்சியில் ஆண்டுதோறும் குறைந்தபட்ச 6.5% வளர வாய்ப்புள்ளது. மத்திய மாநில அளவில் மேலும் பல சிறு திட்டங்கள் செய்யப்பட்டால் இந்த 6.5 % என்பது 7.5& ஆக உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
