இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம்!
இந்தியாவில் முதல்முறையாக கடற்கரை மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
By : Karthiga
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் பொருட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.இந்நிலையில், புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பொருட்டு பூந்தமல்லி, கலங்கரை விளக்கம் இடையேயான வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்காக கடற்கரையில் ரயில் நிலையம் ஒன்று அமைக்கப்படுகிறது. இதுதான் இந்தியாவின் முதல் கடற்கரை மெட்ரோ ரயில் நிலையமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே இந்த ரயில் நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் மத்திய அரசின் ஒப்புதலோடு முழு வீச்சில் நடைபெறும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மொத்தம் 416 மீட்டர் நீளத்துடன் அமைய உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற்றிருக்கும். சுனாமியே வந்தாலும் பாதிக்கப்படாத வகையில் மெரினா கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. “குறிப்பாக சுனாமியின்போது, கடல் மட்டம் உயரும்போது நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை மூடக்கூடிய தானியங்கி வெள்ளத்தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட உள்ளன".
"இதனால் சுனாமி வந்தாலும் உள்ளே இருக்கும் மெட்ரோ நீரில் மூழ்காது. உலகத்தரத்தில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்படுகிறது,” என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SOURCE :NEWS