கொரோனா பாதித்த பிறகும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி உலகை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது - யோகி ஆதித்யநாத் பெருமிதம்
கொரோனா பாதித்த பிறகும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி உலகை வியப்பில் ஆழ்த்தி இருப்பதாக உத்திர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
By : Karthiga
உத்திரபிரதேசத்தின் கோரக்பூரில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது நாட்டின் வேகமான வளர்ச்சி குறித்து அவர் பெருமிதம் பொங்க பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் இந்திய ஏழைகளுக்கு புதிய இந்தியா வீடு வழங்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய மக்கள் தொகை மூன்று கோடி அதேபோல இந்தியாவிலும் கடந்த சில ஆண்டுகளில் மூன்று கோடி புதிய வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதே போல கொரோனா பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். கொரோனாவுக்கு எதிராக மொத்த உலகம் போராடிய போது பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா வலுவான விருப்பத்துடனும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடனும் வைரஸை கட்டுப்படுத்த சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்டது. அதே நேரத்தில் வளர்ச்சி மற்றும் மக்கள் நல பணிகள் நிறுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 135 கோடி மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் தனித்துவமான உதாரணத்தை முன்வைத்து இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் பிரதமர் மோடி மாற்றி இருக்கிறார். கொரோனா தொற்றால் பெரிய பாதிப்புகள் நிகழ்ந்த போதும் நாட்டின் வேகமான வளர்ச்சி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றன. மக்கள் தொகையில் 60 சதவீதம், வர்த்தகம் 85 சதவீதம், ஜி.டி.பி மற்றும் 95 சதவீத காப்புரிமை பெற்றிருக்கும் நாடுகள் அடங்கிய ஜி 20 அமைப்பின் தலைமையை இந்தியா பெற்றிருப்பது எப்போதும் இல்லாத சாதனையாகும். இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.