இலக்குவனிடம் கற்க வேண்டிய பாடங்கள் இராமயணத்திலிருந்து சில அரிய தகவல்கள்
இலக்குவனிடம் கற்க வேண்டிய பாடங்கள் இராமயணத்திலிருந்து சில அரிய தகவல்கள்

ராமாயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ராமன் சீதை ஹனுமான் இராவணன், இவர்களை தாண்டி சுக்ரீவனும் வாலியும் நம் நினைவிற்கு வருவார்கள் அனால் இலக்குவன் என்கிற ஒருவரை பெரும்பாலானோர் அதிகமாக பேசுவது இல்லை. உண்மையில் சொல்வதென்றால் அப்படியான தியாக வாழ்வை அவர் வாழ்ந்ததற்கான அடையாளமே அதுதான். அனுமன் இல்லை என்றால் ராமாயணம் இல்லை என்று சிலர் கூறுவார் அனால் இலக்குவன் இல்லை என்றால் ராமனே இல்லை. ராம பக்தியில் இலக்குவன் அனுமனுக்கு நிகரானவன். யுத்தத்தில் இலக்குவன் ராமனுக்கே நிகரானவன். தாக்கினால் உயிர் பிழைக்க முடியாத "சக்தி ஆயுதம்" விபேஷணனை நோக்கி வந்த போது அதை தன் மார்பில் தாங்கிக்கொண்டவன். யாராலும் கொல்ல முடியாத இந்திரஜித்தை கொன்றவன். ஹனுமான் ராமன் மீது பக்தி செலுத்தினார் என்றால் இலக்குவன் தன்னை ராமனின் ஒரு பாகமாகவே கருதினான்.
நித்ரா தேவியிடம் தன்னை 14 வருடங்கள் ஆட்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு ராமன் சீதை தூங்கும் போது அவர்களை பாதுகாக்கிறார். ஒரு முறை ஒரு அரக்கனிடம் மூவரும் பிடிபட்ட போது, தன்னை இந்த அரக்கனுக்கே பூத பலியாக கொடுத்து விட்டு நீங்களும் சீதையும் தப்பித்துகொள்ளங்கள் என்று இறைஞ்சுகிறார். ராமன் மாய மானை தேடி சென்று நெடு நேரம் வராததால் ராமனை தேடி போ என்று சீதை சொன்னதை மறுத்து சீதைக்கு காவல் இருந்த போது, சீதை சொன்ன கடும் சொல்லை பொறுத்துக்கொள்கிறார். பிறகு சீதை காணாமல் போனபோது ராமன் சொன்ன கடும் சொல்லையும் பொறுத்துக்கொள்கிறார். பிறகு நிதானம் இழந்த ராமனுக்கே சமாதானத்தை சொல்லி மனதை தேற்றுகிறார். இறுதியாக ராமனுக்காகவும் அயோத்திக்காகவும் எமதர்மனின் சாபத்தை ஏற்று கொண்டு சரயு நதிக்கரையில் தவமிருந்து இந்த உடலை விட்டு விடுகிறார்.
ஆனாலும் ராமன் லட்சுமணனை மற்றவர்களை போற்றியது போல் போற்றவில்லை. "சகோதரர்களில் பரதனை போன்றவர்கள் உண்டா ?" என்று பரதனை புகழ்தாரே தவிர இலக்குவனை புகழ வில்லை. ராமா பக்தர்களான அனுமனையோ, சுக்ரீவனையோ, பாரதனையோ ஏன் விபேஷனனயோ கூட ராமன் இலக்குவனை கடிந்து கொண்டது போல் கடிந்துகொண்டதில்லை. ஆனாலும் இலக்குவன் புகழோ பிரதிபலனோ மகிழ்ச்சியையோ துன்பமோ வாழ்வையோ மரணத்தையோ எதையும் பெரிதாக எண்ணாமல் ராமனுக்காகவே வாழ்ந்து மடிந்தார்.
இந்திய இலக்கியங்களில் புராணங்களில் இதிகாசங்கள் இது போன்ற கதாபாத்திரங்கள் எங்கோ ஒன்று தான் தென்படும் அதில் இலக்குவன் முதன்மையானவன். ஒரு துன்பியல் நாயகன்.