சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் உள்ள வாய்ப்புகள்- மதுரை கருத்தரங்கில் பிரதமர் மோடி!
மதுரை கருத்தரங்கில் பங்கேற்ற மோடி சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச வாய்ப்புகள் அதிகரித்துள்ளது பற்றி எடுத்துரைத்தார்.
By : Karthiga
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சர்வதேச வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார் .மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டி.வி.எஸ் நிறுவனம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில் துறை கருத்தரங்கில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது :-
நாட்டில் ஆண்டு தோறும் 45 லட்சத்துக்கு அதிகமான கார்கள், 2 கோடி இருசக்கர வாகனங்கள், 10 லட்சம் வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள், 8.5 லட்சம் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன .இது இந்தியாவின் மொத்த உற்பத்தியில் ஏழு சதவீதமாக உள்ளது. இந்த துறையில் தமிழகம் தன்னுடைய திறனை உலகறிய செய்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி நாட்டின் தற்சார்பின் முக்கிய பங்கு வகிக்கிறது .ஒவ்வொரு பயணிகள் வாகனத்திலும் சுமார் 3000 முதல் 4000 உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன .இவற்றை உற்பத்தி செய்வதில் சிறு, குறு ,நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
உலகில் உள்ள பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவின் சிறு ,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் உதிரி பாகங்களையே அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இது உலகளாவிய சந்தையில் நமது நாட்டின் சிறு ,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரு வலுவான அங்கமாக மாறுவதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அதி நவீன திறன்சார் பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் தேவையாக உள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப குறு சிறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஹைட்ரஜன் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூபாய் 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பி.எல்.ஐலை திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன் மூலம் 100க்கும் அதிகமான வாகன தொழில்நுட்பங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன .
புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும் போது உலகளாவிய முதலீடு இந்தியாவுக்கு அதிக அளவில் கிடைக்கும். எனவே சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என்றார் அவர். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை ,டி.வி.எஸ் ஸ்ரீ சக்கரா நிர்வாக இயக்குனர் ஷோபனா, டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூஷன் தலைவர் ஆர்.தினேஷ், சி ஐ. ஐ டைரக்டர் ஜெனரல் சந்த்ரஜித் பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
SOURCE :Dinamani