Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஞ்சநேயருக்கு இப்படி ஒரு சிறப்பு வழிபாடா?- ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்பு!

முகலாயர்களின் ஆட்சிக்குப் பின்னர் பல புதிய கோவில்களை பக்தர்கள் அமைத்தனர். அவற்றில் சிறப்புற்று விளங்குவது ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்.

ஆஞ்சநேயருக்கு இப்படி ஒரு சிறப்பு வழிபாடா?- ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்பு!

KarthigaBy : Karthiga

  |  19 March 2024 8:07 AM GMT

பல ஆண்டுகளுக்கு முன்பு ராவத்தநல்லூரில் ஆள வந்தார் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். ஒருநாள் ஆஞ்சநேயர் அவருடைய கனவில் தோன்றி தனது விக்கிரகம் இருக்கும் இடத்தை கூறி அதை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு மறைந்தாரம். உடனே கண் விழித்த ஆள வந்தார் தன் கனவில் ஆஞ்சநேயர் கூறிய இடத்தில் விக்ரகத்தை தேடி பார்த்தார் .அதில் ஒரே கல்லாலான ஒன்பதடி உயர ஆஞ்சநேயர் சிலை சவுந்திரிகா மலரை கையில் ஏந்தியபடி மண்ணில் புதைந்திருந்தது தெரிய வந்தது. உடனே அவர் பக்தர்கள் உதவியுடன் ஆஞ்சநேயர் சிலையை வெளியே எடுத்தார்.


அப்போது அதே பகுதியில் ஆறடி உயரமுள்ள பெருமாள் சிலையும் கிடைத்தது. பின்னது இரண்டையும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர். இவ்வாறு உருவானது தான் ராவத்தநல்லூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர் .கோவிலின் மூலவராக வரதராஜ பெருமாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். உற்சவராக ராமர், சீதை ,லட்சுமணர் மற்றும் அனுமார் ஆகியோர் உள்ளனர் .சஞ்சீவிராய ஆஞ்சநேயரின் ஒரு கண் பார்வை கிழக்கு நோக்கியும் மற்றொரு கண் பார்வை தெற்கு நோக்கியும் உள்ளது. இதில் தெற்கு நோக்கி உள்ள பார்வை இலங்கையை நோக்கியும் கிழக்கு நோக்கிய பார்வை தான் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் சிறு துளி சிந்தியதை பார்ப்பது போலவும் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தெற்கு பகுதியில் நின்று தரிசனம் செய்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். வியாதிகள் குணமடையும். தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.


கிழக்கு பகுதியில் இருந்து தரிசனம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.திருமண தடைகள் அகலும்.காணாமல் போன பொருட்கள் திருடு போன பொருட்கள் கிடைக்கும். தொழில் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் நிறைவேற அவர்களது கோரிக்கைகள் கோவில் வளாகத்தில் வைத்த செப்புத்தகத்தில் எழுதப்படும். பின்னர் அந்த செப்பு தகடுகளை கோவில் ராஜகோபுரம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தீபஸ்தம்பத்தில் நெருப்பில் போடுகின்றனர். அந்த தகடு சாம்பலாவதை போல அவர்களின் பிரச்சனைகளும் சாம்பலாகி விடுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.


இப்பதி மக்கள் திருமணம் செய்வது, வீடு வாகனங்கள் வாங்குவது உட்பட எல்லா நிகழ்வுகளுக்கும் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரிடம் உத்தரவு பெற்று செல்கின்றனர். மேலும் ஆஞ்சநேயரை வழிபட வரும் பக்தர்கள் சிதறு தேங்காயை உடைப்பதில்லை .அதற்கு பதிலாக ஆஞ்சநேயரின் சன்னதியில் இருந்து தேங்காயை உருட்டி விடுகின்றனர் .அது ஆஞ்சநேயரின் பாதத்தைச் சென்று சேர்கிறது. தங்கள் பிரச்சனைகளை ஆஞ்சநேயரின் பாதத்தில் சமர்ப்பித்து விட்டால் இனி அவர் பார்த்துக்கொள்வார் என்ற நிம்மதியோடு செல்கிறார்கள் .பக்தரகள் இப்படி தேங்காய் உருட்டி வழிபாடு செய்யும் சிறப்பு வாய்ந்த ஆலயமாக திகழ்கிறது ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர்.


இக்கோவில் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் புதூர் கிராமத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் திருக்கோவிலூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் சங்கராபுரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சஞ்சீவிராய ஆஞ்சநேயரே திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசனம் செய்யலாம். கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றிவிட்டும் செல்கிறார்கள்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News