மத்திய பிரதேசத்தில் அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்தால் இப்படியும் ஒரு கொடுமையா? தந்தைக்கு நேர்ந்த அவலம்!
அமரர் ஊர்தி தர மறுத்த அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம்.குழந்தையின் உடலை பையில் வைத்து பஸ்ஸில் எடுத்துச் சென்று தந்தை.மத்திய பிரதேசத்தில் நேர்ந்த அவலம்.
By : Karthiga
மத்திய பிரதேசம் மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய் கடந்த 13- ஆம் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவர் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி பெற்றோர் அந்த குழந்தையை அங்கு எடுத்துச் சென்றனர் . ஆனால் சிகிச்சை பலனின்றி 15 ஆம் தேதி குழந்தை இறந்துவிட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்திருக்கிறது. தனியார் ஊர்தியை ஏற்பாடு செய்து கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதை அடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து பஸ்ஸில் எடுத்துச் சென்றுள்ளார். இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு உருக்கத்துடன் கூறியுள்ளார். ஆனால் இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஸ்ரா மறுத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கியுள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்த போதும் அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்ஜார்ஜ் செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே டிஸ்ஜார்ஜ் செய்தபோது குழந்தை உயிருடன் தான் இருந்தது என தெரிவித்தார்.