உலக மண் தினத்தன்று கடலூரில் ஈஷாவின் புதிய நர்சரி தொடக்கம் - ரூ.3-க்கு டிம்பர் மரக்கன்றுகள் விநியோகம்
விவசாயியே நர்சரி விநியோகஸ்தராகவும் செயல்பட்டு கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் புதிதாக ஒரு ஈஷா நர்சரி உலக மண் தினமான நேற்று (டிசம்பர் 5) கடலூரில் தொடங்கப்பட்டது.
By : Mohan Raj
விவசாயியே நர்சரி விநியோகஸ்தராகவும் செயல்பட்டு கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் புதிதாக ஒரு ஈஷா நர்சரி உலக மண் தினமான நேற்று (டிசம்பர் 5) கடலூரில் தொடங்கப்பட்டது.
இந்த நர்சரியில் பண மதிப்புமிக்க தேக்கு, செம்மரம், சந்தனம் உள்ளிட்ட அனைத்து வகையான டிம்பர் மரக்கன்றுகளும் ஒரு மரக்கன்று - 3 ரூபாய் என்ற மிக குறைவான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
நர்சரியின் தொடக்க விழாவில் கிருஷ்ணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் திரு. கிருஷ்ணமூர்த்தி, கடலூர் ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் திரு. பாலு, குள்ளஞ்சாவடி திருவேங்கட மஹால் உரிமையாளர் திரு கோவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மரக்கன்றுகள் நட்டு சிறப்புரை ஆற்றினர்.
இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில், "சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தை 2019-ம் ஆண்டு தொடங்கினார். சத்குருவின் விழிப்புணர்வு பயணம் மற்றும் இயக்கத்தின் களப் பணியாளர்களின் தொடர் செயல்பாடுகளால், மரம் வளர்க்கும் ஆர்வம் தமிழக விவசாயிகளிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 4 கோடி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளோம்.
இயற்கை முறையில் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக தமிழ்நாட்டில் 40 ஈஷா நர்சரிகளை நடத்தி வருகிறோம். இருப்பினும், மரக்கன்றுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இப்பணியில் விவசாயிகளை நேரடியாக ஈடுபடுத்தி அவர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பை வழங்க முடிவு செய்தோம்.
அந்த வகையில் இந்தாண்டு 10 விவசாயிகளிடம் இருந்து சுமார் 50 லட்சம் மரக்கன்றுகளை கொள்முதல் செய்துள்ளோம். இதேபோல், எங்களுடைய ஈஷா நர்சரிகள் இல்லாத ஊர்களில் விவசாயிகளே தங்களுடைய இடத்தில் நர்சரிகளை அமைத்து நாங்கள் வழங்கும் மரக்கன்றுகளை மற்ற விவசாயிகளுக்கு விநியோகிக்கும் உரிமையையும் 12 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.
அதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் விவசாயி திரு. சேதுமாதவன் அவர்களுக்கு இந்த விநியோக உரிமையை வழங்கி உள்ளோம். இதன்மூலம், அவருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இப்பகுதி விவசாயிகளும் தங்கள் கிராமத்திற்கு அருகிலேயே தரமான மரக்கன்றுகளை ரூ.3 என்ற மிக குறைவான விலையில் பெற்று கொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது." என்றார்.
சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல் இயக்கம் ஊக்குவித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விவசாய களப் பயிற்சிகள் ம்ற்றும் கருத்தரங்குகளை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும், விவசாயிகள் மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து நடவு செய்யவும் இலவச ஆலோசனைகள் வழங்கி வருகிறது. தங்கள் நிலங்களில் மரம் சார்ந்த விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனைகளை பெற்று கொள்ளலாம்.