நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இது கடைசி பந்து: எம்.பி.க்கள் சிக்ஸர் அடிக்க வேண்டும் - நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து மோடி
நம்முடன் யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்று சக எதிர்க்கட்சிகளை பரிசோதிப்பதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கியுள்ளது. அதே சமயத்தில் நேற்று பா.ஜனதா எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-
டெல்லி நிர்வாக திருத்த மசோதா மீதான ஓட்டெடுப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய அரை இறுதி பந்தயம் என்று சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வருணித்து இருந்தனர் . அந்த அரை இறுதி பந்தயத்தில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். அதற்காக மாநிலங்களவை பா.ஜனதா எம்.பிக்களை பாராட்டுகிறேன். இதுபோல் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம். கடந்த 2018 ஆம் ஆண்டு நான் பேசிய போது 2023 ஆம் ஆண்டிலும் எதிர் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். அதேபோல் நம்பிக்கையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணியில் ஒருவருக்கொருவர் இடையே அவநம்பிக்கை நிலவி வருகிறது. எனவே எந்த கட்சி நம்முடன் இருக்கும் எந்த கட்சி நம்முடன் இருக்காது என்று பரிசோதிப்பதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது சக எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை பரிசோதிப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது கடைசி பந்து. இதில் எம்.பி.க்கள் சிக்சர் அடிக்க வேண்டும். சில எதிர்க்கட்சிகள் சமூகநீதி பற்றி பேசுகின்றன. ஆனால் வாரிசு அரசியல் ஊழல் அரசியல் செய்து அந்த கட்சிகள் தான் சமூக நீதிக்கு பெரும் தீங்கு விளைவுகின்றன. ஊழலும் வாரிசு அரசியலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
SOURCE :DAILY THANTHI