ஐயா முதல்வரே எங்கே வாக்குறுதி? - போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By : Karthiga
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக திருவாரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி, உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள் சோமசுந்தரம், துரைராஜ் , முரளி ரவி மற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர் . மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.