கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்னையில் போராட்டம்- 2600 பேர் கைது!
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சென்னையில் நேற்று கோட்டையை முற்றுகை இட முயன்றனர் இது தொடர்பாக 2600 பேர் கைது செய்யப்பட்டனர்.
By : Karthiga
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் டிசம்பர் - 28ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி சென்னை திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நேற்று காலை 10 மணி அளவில் கூடினார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் , தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் , தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கோட்டை முற்றுகை போராட்டத்தின் இடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதற்கிடையில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசன், மாயவன், ஜே.காந்திராஜ்,மயில் வின்சென்ட் பால்ராஜ் மலர்விழி பார்த்தசாரதி மகேந்திரன் உட்பட 31 பேருடன் தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சு வர்த்தையில்உடன்பாடு எட்டப்படவில்லை .இதைத்தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராமு காமராஜ் ,அக்ரி மாதவன் , காமராஜர் உட்பட பல்வேறு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் கோட்டையை முற்றுகையிட முடிவு செய்தனர் .
இதனை எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிவானந்தா சாலையில் இருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கோட்டூர் புறம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ்காரர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .இதை அடுத்து தடையை மீறி கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக சுமார் 600 பெண்கள் உட்பட 2600 க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்து பஸ்ஸில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
SOURCE :DAILY THANTHI