Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார் - முற்றுகிறது வைகோ-காங்கிரஸ் மோதல்.!

ஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார் - முற்றுகிறது வைகோ-காங்கிரஸ் மோதல்.!

ஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார் - முற்றுகிறது வைகோ-காங்கிரஸ் மோதல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Aug 2019 7:27 AM GMT


காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட மசோதா மேல் சபையில் கொண்டு வரும் போது தி.மு.க. காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தனர். வைகோவும் அதை எதிர்த்து பேசினார் என்றாலும், காங்கிரசை கடுமையாக விமர்சனம் செய்தார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தான் முதல் துரோகம் செய்தது என்று குற்றம் சாட்டினார்.


இதனால், ஆவேசம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது அறிக்கையில், வைகோ மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். ‘காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று கூறும் வைகோ, அது என்ன துரோகம் என்பதை சொன்னால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.


நேருவின் உறுதியான நடவடிக்கையால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையென்றால், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்திருக்கும். இதை துரோகம் என்று வைகோ சொல்லுகிறாரா? துரோகம் என்று சொல்லும் வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும் என்று கடுமையாக தாக்கியுள்ளார்.


கே.எஸ்.அழகிரிக்கு வைகோ அளித்துள்ள பதிலில், ‘‘நான் காங்கிரஸ் தயவால்தான் மாநிலங்களவையில் எம்.பி. ஆனேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்வது தவறு. அவர் என் மீது கொண்ட கோபத்தினால்தான் அவ்வாறு கூறி இருக்கிறார். தி.மு.க.வுக்கு சட்டசபையில் 108 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஒரு மேல்சபை எம்.பி.யை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுபோதும். அதன்படி மேல்சபைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்ய 102 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு போதுமானது.


இப்போது மட்டுமல்ல, இதற்குமுன்பும் காங்கிரஸ் தயவில் நான் பாராளுமன்றத்துக்கு செல்லவில்லை. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை என்னை மேல்சபை எம்.பி. ஆக்கினார். இந்த முறையும் என்னை தி.மு.க.தான் தேர்ந்தெடுத்து அனுப்பியது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து அனுப்பவில்லை.


ஒரு இனத்தையே அழித்தவர்கள் காங்கிரசார். எனவே, அவர்கள் தயவில் ஒரு போதும் நான் பாராளுமன்றத்துக்கு செல்லமாட்டேன். இத்தனை ஆண்டுகளிலும் காங்கிரஸ் கட்சிதான் ஒவ்வொரு முறையும் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. 1980-ம் ஆண்டு ஷேக் அப்துல்லாவை நான் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அப்துல்லா என்னிடம் ‘காங்கிரஸ் கட்சியின் அரசியல் அகராதியில் நட்பு, நன்றி என்ற இரண்டு சொற்களுக்கும் இடமில்லை’ என்று சொன்ன சொற்கள் மறக்க முடியாதவை.


நான் மேல் சபை எம்.பி. பதவிக்கு விண்ணப்பித்த மனுவில் முன் மொழிந்த 10 எம்.எல்.ஏக்களும் தி.மு.க.வினர் தான். ஒருவர் கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிடையாது. காங்கிரசார் என்னை எம்.பி. ஆக்கியதாக கூற வேண்டாம். காங்கிரஸ் கட்சிதான் காஷ்மீர் மாநிலத்துக்கு முழு அந்தஸ்து, தனிமாநிலம், தனி அரசியல் நிர்ணயசபை, தனி அரசியல் அமைப்பு, தனிக்கொடி பிரதமர் என வாக்குறுதி அளித்தது. பா.ஜனதா இந்த வாக்குறுதிகளை அளிக்கவில்லை.


அடிக்கடி அரசுகளை கவிழ்த்ததன் மூலம் வாக்குறுதியை உடைத்ததும் காங்கிரஸ்தான். காஷ்மீர் மக்களின் உணர்வுகளுடன் விளையாடியதும் காங்கிரஸ் கட்சிதான் என்று வைகோ காங்கிரஸ் மீது மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News