ஸ்விட்சர்லாந்துக்கு போட்டியாக காஷ்மீர் உருவெடுக்கும்- பிரதமர் மோடி!
காஷ்மீரின் வளர்ச்சிக்கு 370- வது சட்டப்பிரிவு தடையாக இருந்ததாகவும் காஷ்மீரை சுவிட்சர்லாந்துக்கு போட்டியாக மாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
By : Karthiga
பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீர் சென்றார். அங்கு அவர் ஜம்முநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 32 ஆயிரம் கோடி மதிப்பிலான கல்வி, ரயில்வே, விமான போக்குவரத்து மற்றும் சாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இது தவிர நாட்டின் பிற பகுதிகளுக்கான ரூபாய் 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் புதிதாக பணியமர்த்தத்தப்பட்ட சுமார் 1500 அரசு ஊழியர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கிய பிரதமர் மோடி மத்திய அரசின் 'விக்சித்பாரத் விக்சித் ஜம்மு' திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கு மழை பெய்தது. இருப்பினும் ஆயிரக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இது மோடியின் உத்தரவாதம். இது தொடரும். ஜம்மு காஷ்மீரில் அனைத்து சுற்று வளர்ச்சியை கொண்டு வருவதில் 370-வது சட்டப்பிரிவு முக்கிய தடையாக இருந்தது. எனவே அதை பா.ஜனதா அரசு ரத்து செய்துள்ளது .ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசால் சாமானியர்களின் நிலைமை பற்றி சிந்திக்க முடியாது. காஷ்மீர் குடும்ப அட்டையிலிருந்து விடுபடுவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ந்த இந்தியா என்றால் வளர்ந்த காஷ்மீர் என்று பொருள். சட்ட பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் சாமானிய மக்களுக்கு முதல்முறையாக அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதிக்கான உத்தரவாதம் கிடைத்துள்ளது. வளரும் காஷ்மீர் குறித்து இன்று உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. காஷ்மீரில் இருந்து ஏமாற்றம் தரும் செய்திகள் மட்டுமே வந்த நாட்களை பார்த்திருக்கிறோம்.
வெடிகுண்டு, துப்பாக்கி கடத்தல் மற்றும் பிரிவினைவாதம் அதன் துரதிஷ்டமாக மாறியது .இன்று சமச்சீர் மற்றும் முழுமையான வளர்ச்சியுடன் ஒரு புதிய காஷ்மீரை பார்க்கிறோம். நாங்கள் காஷ்மீரை மேலும் வளர்ச்சி அடைய செய்வோம் என்று உறுதியளித்துள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் உங்கள் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று நான் முழுமையாக நம்பிக்கையுடன் இருக்கிறேன். சுவிட்சர்லாந்து போன்ற சர்வதேச சுற்றுலா தளங்களுக்கு போட்டியாக காஷ்மீரை மாற்றுவோம். மக்கள் சுற்றலாவுக்கு செல்வதை மறந்து விடும் வகையில் காஷ்மீரில் உள் கட்டமைப்பை உருவாக்குவோம். இவ்வாறு மோடி பேசினார்.
SOURCE :DAILY THANTHI