கீழடியில் கண்டெடுக்கப்பட்ட புதிய பொருள்-ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம்!
அகழாய்வு பணியில் கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By : Shiva
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழ்வாய்வு பணியின் போது ஒரு அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட பழமையான கல் தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அருகே கீழடி கொந்தகை போன்ற இடங்களில் பெப்ரவரி முதலாம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வு பணிகளின் போது எண்ணற்ற பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வு பணியில் கல்தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது வரை நடைபெற்ற அகழாய்வு பணியின் போது 850 க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கீழடியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. இங்கே மண்பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழிலுக்கு பயன்படும் தக்களி , கற்கோடாரி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மை மற்றும் கண்ணாடி பாசிகள், வெள்ளிக்காசு, செப்பு மோதிரம், உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழர்களின் பழங்கால நாகரிகத்தை வெளிக்கொண்டுவரும் கீழடி அகழாய்வு பணியில் மேலும் ஒரு நற்செய்தியாக தற்போது ஒரு அடி உயரம் ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது, "மேற்கொண்டு அகழாய்வு செய்யும் போது பழமையான இந்த கல் தூணின் உயரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். அதன் வடிவம் முழுமையாக வெளிக்கொணரப்பட்ட பின்னர் அதன் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவரும்" என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : Puthiya தலைமுறை
Image courtesy : Puthiya thalaimurai