"ராஜீவ் காந்தியை கொன்றது தியாகச் செயல்" - முன்னாள் பிரதமர் கொலையை மீண்டும் கொண்டாடும் சீமான்!
"ராஜீவ் காந்தியை கொன்றது தியாகச் செயல்" - முன்னாள் பிரதமர் கொலையை மீண்டும் கொண்டாடும் சீமான்!
By : Kathir Webdesk
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை, நியாயப்படுத்தி பேசி சர்ச்சையில் சிக்கிய சீமான், மீண்டும் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை தியாகி என்று நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் பேசிய வீடியோ, வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
ராஜீவ் காந்தி மரணத்தைப்பற்றி நான் பேசியதற்கு, கொந்தளித்து விட்டார்கள். நல்ல நேர்மையான தலைவர்களாக இருந்தால் வாதிட வேண்டும். வரலாற்றில் யார் பிழை செய்தது? பேசி முடிவு எடுத்துக் கொள்வோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் இப்படித்தான் பேசுவேன். இப்படிப் பேசினால் ஓட்டுப்போட மாட்டார்கள் என்றால் தேவையில்லை. ராஜீவ் காந்தி வாழ்க என்று சொன்னால்தான், எனக்கு ஓட்டுப் போடுவான் என்றால், ராஜீவ்காந்தி கட்சிக்கு ஓட்டு போடவில்லையே ஏன்?
காங்கிரசை தனியாக நிற்க சொல்லு நானும் தனியாக நிற்கிறேன். எது பெரிய கட்சி, யாருக்கு மக்கள் ஆதரவு, என்பதை தெரிந்து விடப்போகிறது. நான் பிரபாகரனின் பிள்ளை. நான் பிரபாகரனை தலைவராக ஏற்று நிற்கிறேன். நீ ராஜீவ் காந்தியை கொன்று விட்டான் என்று சொல்லிச் சொல்லியே ஓட்டு கேட்டு வா.
அதே ஆண்மக்கள் பஞ்சாப்புக்கு போங்கள். சீக்கியர்கள் இந்திராகாந்தியை கொன்றுவிட்டார்கள் என்று ஒரு முறை சொல்லிவிட்டு வெளியில் வாருங்கள் பார்க்கலாம்? அங்கே போனால் வாயை, பசை போட்டு ஒட்டிக்கொள்வார்கள். இங்கு வந்து பேசுவார்கள். ஏனென்றால் கேட்க ஆளில்லை பார். ஏனென்றால், இங்கே இருந்தவர்கள் அப்படி. சிவசங்கர மேனன் எழுதுகிறார், இறுதிப் போர் காலகட்டத்தில் நார்வேயும், அமெரிக்காவும் தலையிட்டு பிரபாகரன் உள்ளிட்ட முதன்மை தளபதிகளை காப்பாற்றி ஒரு அமைதியான பேச்சுவார்த்தையை நடத்தி, ஒரு அரசியல் தீர்வுக்கு கொண்டு வர வேண்டுமென்று விரும்பினார்கள்.
அன்றைய டெல்லி தலைமையும், தமிழ்நாட்டுத் தலைவர்களும் அதை விரும்பவில்லை. தமிழ்நாட்டுத் தலைவர்கள் யார் யார்? அதற்கு காரணம் என்ன? ஏன் விரும்பவில்லை? என்பதையும் அவர் பதிவு செய்து உள்ளார். பிரபாகரன் அங்கே வென்று விடுதலை அடைவது என்பது இவர்களின் எதிர்கால அரசியல் இருப்பிற்கு ஆபத்தாகும் என்று அஞ்சினார்கள். ஏன் கொள்ளையடிக்க முடியாது. திருட முடியாது. காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்று பேச முடியாது. கி.மு, கி.பி என்று சொல்லத் தெரியாமல் கிமு கீப்பு என்று செல்பவர்களை எல்லாம் தலைவராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன பண்ண முடியும்? அது பழக்க தோஷத்தில் வந்துவிட்டது? என்ன பண்ண முடியும் சொல்லுங்கள். ஆட்டுக்கு தாடி நாட்டுக்கு கவர்னர் என்பதை மாட்டுக்கு கவர்னர் என்ற இவர்களை வைத்து என்ன செய்ய முடியும்?
ஊழல் செய்ய முடியாது. இலஞ்சம் பெற முடியாது. பெண்களை வன்புணர்வு செய்ய முடியாது. பாலியல் தொல்லை கொடுக்க முடியாது. ஏன் பக்கத்தில் ஒரு நாடு உலக புனிதன், மகா மனிதனின் தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கும். அங்கு ஊழல் இருக்காது. லஞ்சம் இருக்காது. கொள்ளை இருக்காது. சூது இருக்காது. எதுவுமற்ற ஒரு நாடாக உயர்ந்து வந்துகொண்டிருக்கும்.
இங்கிருந்து படித்த போவான். அங்கே தன் அண்ணன் தேசத்திற்கு போவான். மற்றவர்களுக்கெல்லாம் பாஸ்போர்ட் விசா இருக்கும். கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி தேவைப்படும். தமிழர்களுக்கு தேவைப்படாது. ஏனென்றால் சொந்த நாடு. அங்கு போய் படிப்பான். பல்கலைக்கழகங்களில் படிப்பான். மருத்துவம் படிப்பான். இன்று சீனாவில், பிலிப்பைன்சில், ரஷ்யாவில் போய் என் பிள்ளைகள் படிப்பது போல் அங்கு போய் படிப்பான். சிங்கப்பூரில் போய், மலேசியாவில் போய் வேலை பார்ப்பது போல, அங்கே தன் அண்ணன் தேசத்தில் வேலை செய்வான். என் பிள்ளைகள் அங்கேயே ராணுவத்தில் பயிற்சி எடுப்பார்கள். அவர்கள் இங்கே நுழையும் போது, சாதாரண ஆளாக வருகிறானா? ராணுவ வீரனாக வருகிறானா? என்பது தெரியாது. இதெல்லாம் நடந்து இருக்கும், ஆனால் நடக்காமல் ஒன்றும் போகாது நடக்கும்.
கருணாநிதி, அவரின் மக்கள்கள், பேரன் உதயநிதி பிறகு அவருடைய வாரிசு, இந்த கோஷ்டி எல்லாம் ஆட்சி செய்து கொண்டிருக்கும். வழக்கம்போல லஞ்சம், ஊழல் என்று. எவன் குடிமக்கள், எவன் ராணுவ வீரர் என்று தெரியாது அறுத்து போட்டுவிட்டு போய்விடுவார்கள். பக்கத்தில் ஒரு நாடு. அங்கு என் தலைவன் எப்படி ஆட்சி செய்து கொண்டிருக்கிறான். நீ என்ன ஆட்சி நடத்துகிறார்? என்ற கேள்வி எழும். அந்த பயம்.
தேர்தல் ஆணையத்திடம் திமுக, இடதுசாரி கட்சிகளுக்கு அதாவது சிபிஐ க்கு 15 கோடி ரூபாய், சிபிஎம்முக்கு 10 கோடி ரூபாய், ஈஸ்வரன் கட்சிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்தேன் என்று சொல்கிறது. வாங்கிய கட்சிகளை எல்லாம் விமர்சிக்கின்ற ஊடகங்கள், கொடுத்த கட்சியான திமுகவிடம் உனக்கு ஏது இவ்வளவு பணம்? என்று கேட்கவில்லை. இந்த பணம் எல்லாம் எது? விவசாயம் செய்து, காட்டு முள்ளை வெட்டி, கரும்பு வெட்டி, தென்னைமரம் வைத்து வளர்த்து, பால் கறந்து வித்து சம்பாதித்ததா?
இப்போதும் சொல்கிறேன், வரலாறு மாறும். வரலாற்றை நான் மாற்றி விட்டு தான் போவேன். நீ கவலைப்படாதே.
ப்ளூ ஸ்டார் ஆபரேஷன் என்று போட்டு பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி அங்கு சீக்கிய மக்களை கொன்றதற்கு பழிவாங்க தான் இந்திரா காந்தி மரணம் நடந்தது. வாஞ்சிநாதன், ஆஷ்சை சுட்டது தியாகம் என்கிறாய், ஜெனரல் டயரை உத்தம்சிங் 21 ஆண்டுகளுக்குப் பிறகு போய்விட்டதை தியாகம் தியாகம் என்கிறாய், அப்படி என்றால் எங்கள் அக்கா தனு செய்தது, எங்களுக்கு தியாகம்தான். தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
நாங்கள் எங்கள் மாவீரனின் குருதி மீது உறுதி எடுத்து இருக்கிறோம் திராவிட முன்னேற்ற கழகமும் காங்கிரசும் என் இனத்தை கொண்டது இந்த கட்சிகளுக்கு அரசு அதிகார வலிமை இல்லாமல் செய்வதென்று பிரபாகரன் பிள்ளைகள் உறுதி எழுதி இருக்கிறோம்
நான் கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் முடியப்போகிறது. ராஜீவ் காந்தி இறந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் தலைவரின் படத்தை வைத்தால் நீங்கள் கிழிக்கிறீர்களா? நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு ராஜீவ் காந்தி படத்தை வைத்தால் கிழிப்பேன்.
சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் அங்கே சண்டை நடந்து கொண்டிருந்தது. அதை 2 லட்சம் ராணுவ வீரர்களை அனுப்பி, இந்திய ராணுவத்திற்கும், தமிழர்களுக்கும் ஆன போராக மாற்றியது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திதான். ராணுவ தளபதி ஹரிஹர சிங் புத்தகத்தில் எழுதியுள்ளார், பிரபாகரனை கொல்லச் சொல்லி ராஜீவ் காந்தி சொன்னார் என்று எழுதி இருக்கிறார். ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு அவரை, பிரபாகரனை கொலை செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னீர்கள், சரி. ஆனால் அவர் அவரது தாயகத்தின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் போது, அவரைக் கொல்ல வேண்டும் என்று சொன்னீர்களே? அதற்கான காரணம் என்ன? யார் பிழை செய்தது? யார் குற்றவாளி?
இவ்வளவு தவறுகள் இருக்கிறது. இதில் எதையுமே பேசாமல் ராஜீவ் காந்தியைக் கொன்று விட்டான் என்று எங்கள் தலைவரை கொன்றுவிட்டார்கள். நீங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேரை கொண்டு விட்டீர்கள். ஆனால் அந்த ஒருவரின் மரணத்தை காட்டி என் இனத்தையும் கொண்டு விட்டீர்கள். என் தலைவன் பயங்கரவாதி என்றால், உங்களுக்கு என்ன பெயர்? நீங்கள் சர்வதேச பயங்கரவாதி. நீங்களெல்லாம் அதை ஏன் இப்போது பேசவேண்டும் நான் எப்போதும் பேசுவேன்.
போரென்றால் பொதுமக்கள் சாவது யதார்த்தம்தானே என்று சொன்ன ஜெயலலிதாவுக்கும், மழைவிட்டாலும் தூவானம் விடாது என்ற கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்?
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி தொலைக்காட்சிகளில் ஓடுகிறது. அந்த நேரத்தில் கருணாநிதி டெல்லியில் பதவிக்காக தன் குடும்பத்தோடு காத்து இருக்கிறார். அப்போது கருணாநிதியிடம் கேட்கிறார்கள், பிரபாகரன் இறந்துவிட்டதாக சொல்கிறார்களே, இந்த நேரத்தில் நீங்கள் பதவிக்காக இங்கு வந்து காத்து இருக்கிறீர்களே? என்று. அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? சங்க இலக்கியங்களில், சங்க காலத்தில், ஒரு தெருவில் சாவு பறை கேட்டாலும், இன்னொரு தெருவில் மங்கள ஒலி கேட்டு இருக்கிறது என்பதாகும் என்று சொன்னார்.
இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.