Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு விருதை வென்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்கலம்!

பக்தர்களின் மனதை கவர்ந்த கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்துக்கு சிறப்பு விருது டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

சிறப்பு விருதை வென்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்கலம்!
X

KarthigaBy : Karthiga

  |  5 Feb 2024 8:45 AM GMT

நினைவாற்றலுக்கும் நன்றி உணர்வுக்கும் உதாரணமாக கூறப்படும் யானையின் சிறப்புகளை சங்க இலக்கியங்களில் முற்கால புலவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக யானையின் பலத்தை மெய்ப்பிக்கும் வகையில் புறநானூறில் யானையின் கை கரும்பனை போன்று பெரியதாக இருக்கும் என்பதை 'இரும்பன்ன பெருங்கை யானை' என்ற வரி மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பலத்துக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் யானை பல்வேறு இடங்களில் மனிதர்களின் மனங்களை கவரும் வகையில் நடந்து கொள்கிறது .இந்த வகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானை மங்கலம் பக்தர்களின் செல்லப்பிள்ளை என்று அழைக்கும் அளவுக்கு மிகவும் சாதுவான குணத்துடன் விளங்குகிறது.


கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோவிலாகும் .மகாமக விழாவுக்கு முக்கிய தொடர்புள்ள இந்த கோவிலுக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவர் மங்கலம் என்ற பெயரிட்ட ஒரு பெண் யானையை பரிசாக வழங்கினார். தற்போது 56 வயதாகும் பெண் யானை மங்கலம் பக்தர்களுக்கு ஆசி வழங்கும்போது மிகவும் பாசத்துடன் ஆசி வழங்குவதோடு மட்டுமின்றி கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்களை நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது.


யானை மங்கலம் மிகவும் சுறுசுறுப்புடனும் அதை பராமரிக்கும் பாகன் அசோக்கிடம் அளவற்ற அன்போடும் பழகும். பாகனுடன் சேர்ந்து செல்போன் பார்ப்பது, விளையாடுவது, குழந்தைகளை கண்டால் குதுகலத்தில் பிளிறுவது உள்ளிட்ட பல்வேறு குறும்புத்தனங்களில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை கவரும் . இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி முக்கிய இடம் பிடித்தது. இதனால் கும்பகோணத்திற்கு வரும் பக்தர்கள் யானை மங்கலத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த யானை குளிக்க கோவில் வளாகத்தில் ஒரு நீச்சல் குளமும் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்கலத்துக்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்ட யானை மற்றும் சுறுசுறுப்பான யானைக்கான சிறப்பு விருதை மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புது டெல்லி சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்ரா அவுர் ஜனதா அமைப்பு வழங்கியுள்ளது. நேற்று இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன் அஜித் குமார் ஆகியோர் ஆதி கும்பேஸ்வரர் கோவில் செயல் அலுவலகர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் யானைப்பாகன் அசோக்கிடம் விருது மற்றும் நினைவு பரிசை வழங்கினர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News