சிவலிங்க வடிவில் 10 ஆயிரம் விளக்குகள்: பிரகாசத்துடன் ஜொலித்த கோவில்!
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் லிங்க வடிவில் 10,000 விளக்குகளுடன் பிரகாசத்துடன் ஜொலித்தது.
By : Bharathi Latha
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இங்கு இறைவன் நாகநாதர் என்றும், இறைவி, பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்கிறார். இந்தச் சன்னிதியில் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு கால வேளையில் பூஜைகள் செய்தால் சகல நோய்களும் தீரும். சித்திரை மாதத்தில் வரும் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளி, இத்தல லிங்கத்தின் மீது படும் விதத்தில் சோழர்கள் அமைத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நாகேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. கடந்த மாதம் 27-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக நாகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோல் கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவள்ளி அம்மனுடன் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த கோவிலில் தற்போது நடைபெற்ற சித்ரா பௌர்ணமியை ஒட்டி கோவிலில் ஏற்றப்பட்ட 10,000 விளக்குகள் லிங்க வடிவத்தில் பிரகாசமாக ஜொலித்தது. மேலும் சித்ரா பவுர்ணமியில் பல்வேறு பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தார்கள்.
Input & Image courtesy: Thanthi News