வெடிக்காத புதிய சிலிண்டர் அறிமுகம் தமிழகத்தில் இன்னும் 18 மாதங்களில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் - இந்தியன் ஆயில் நிறுவனம் அசத்தல் தகவல்
தமிழகத்தில் இன்னும் 18 மாதங்களில் குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனத் தலைவர் அசோகன் கூறினார். மேலும் வெடிக்காத புதிய சிலிண்டர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
By : Karthiga
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் செயல் இயக்குனர் மற்றும் தலைவர் வி.சி.அசோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் சில்லறை விற்பனையாளராக இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. நாட்டிற்கான எரிசக்தியை வழங்குவதிலும் தூய்மையான பசுமையான சுற்றுச் சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் எங்களது பங்கு அதிகம்.
நூறாம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் விதமாக வருகின்ற 2046 ஆம் ஆண்டுக்குள் புகையில்லா நிலையை எட்டுவது தான் எங்களது இலக்கு. மேலும் 2070 ஆம் ஆண்டுக்குள் மாசில்லா ஆற்றலை அடைய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். அதற்காக பசுமை மிகு ஆற்றலுக்கு மாறுவதற்கான திட்டங்களை தற்போது தீவிரப் படுத்தி உள்ளோம் . இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோலியத்துடன் இதுவரை 10 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்து வருகிறது. இது வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதமாக உயர்த்தப்படும் .
உயிரி எரிவாயு திட்டமான எஸ்.ஏ.டி.ஏ.டி புதிய தொழில் முனைவோர்கள் மூலம் புதிய தயாரிப்பு கலன்களை ஏற்படுத்த ஊக்கப்படுத்துகிறது. இவற்றை எண்ணெய் நிறுவனங்களுக்கும் வாகனம் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்யவும் முடியும் .அதற்காக நாடு முழுவதும் 2500 தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றும் 200 பேருக்கு பயோகியாஸ் உற்பத்திக்கான கலனை அமைக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது .இந்தியன் ஆயில் நிறுவனம் எக்ஸ்ட்ரா கிரீன் டீசலை அறிமுகம் செய்துள்ளது.
உலக அளவில் இது தூய்மையான எரிபொருளாகவும் அதிக சிக்கனத்தை தருவதோடு சத்தத்தையும் குறைக்கிறது. இது கார்பன் மோனாக்சைடின் அளவை 12 சதவீதமும் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியாவதை ஐந்து சதவீதம் வரையும் குறைக்கிறது. மேலும் 100 எக்ஸ்.பி என்ற 100 ஆக்டேன் தரம் கொண்ட எரிபொருள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். உயர்தர சொகுசு கார் மோட்டார் சைக்கிள் போன்றவை சிறப்பாக செயல்படும் வகையில் இந்த எரிபொருள் உதவுகிறது.
உயர்தர ஆக்டேன் பெட்ரோலை பயன்படுத்தி ஆட்டோமேக்ஸ் வாயிலாக எக்ஸ்.பி.100 தயாரிக்கப்படுகிறது. சென்னை கோவை ஈரோடு திருப்பூர் மற்றும் ஊட்டியில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது புதுச்சேரி, மதுரை மற்றும் கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்படும். இந்தியன் ஆயில் நிறுவனம் கம்போசிட் என்ற பைபர் சிலிண்டரை தமிழகத்தில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த சிலிண்டர் 5 மற்றும் 10 கிலோ அளவுகளில் கிடைக்கிறது.
இந்த சிலிண்டர் வெடிக்காது. மிகவும் பாதுகாப்பானது. எடை குறைவானது. தற்போது அனைத்து இந்திய விநியோகஸ்தர்களிடமும் அதற்கான டெபாசிட் தொகையை செலுத்தி கம்போசிட் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிலிண்டரில் கியாசின் அளவுகளை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். ஏற்கனவே இணைப்பு வைத்திருப்பவர்கள் இந்த கம்போசிட் சிலிண்டருக்கு மாறிக் கொள்ளலாம். இன்னும் 18 மாதங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சி.பி.சி.எல் நிறுவனத்துடன் இணைந்து 54,000 கோடி மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.