கலங்கரை விளக்கங்களில் சுற்றுலா திட்டம் - தமிழகத்தில் 11 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு!
கலங்கரை விளக்கம் சுற்றுலா திட்டத்தில் நாடு முழுவதும் 65 கலங்கரை விளக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன தமிழகத்தில் நாகப்பட்டினம் கோடியக்கரை பூம்புகார் மல்லிப்பட்டினம் உட்பட 11 கலங்கரை விளக்கங்கள் இந்த திட்டத்தில் உள்ளன
By : Karthiga
நாடாளுமன்ற மக்களவையில் சுற்றுலா திட்ட கலங்கரை விளக்கங்கள் பற்றிய ஒரு கேள்விக்கு மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி துறை மந்திரி சார்பானந்த சோனாவால் எழுத்துப்பூர்வமாக பதில் தெரிவித்து இருந்தார். அதில் பதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பில் கலங்கரை விளக்க சுற்றுலாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் 65 கலங்கரை விளக்கங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மாநிலம் வாரியாக தமிழகத்தில் 11, குஜராத்தில் 13, கேரளாவில் 10, ஆந்திராவில் 9, கர்நாடகா ஒடிசா மற்றும் மராட்டிய மாநிலங்களில் தலா 5,மேற்கு வங்காளத்தில் 3,அந்தமானில் 2,) லட்சத்தீவு மற்றும் கோவாவில் தலா 1என 65 கலங்கரை விளக்கங்கள் இந்த சுற்றுலாத் திட்டத்தில் உள்ளன.
இதில் தமிழகத்தில் கன்னியாகுமரி, கூத்தங்குடளி,மணப்பாடு, கீழக்கரை, தனுஷ்கோடி, பாம்பன், மல்லிப்பட்டினம், கோடியக்கரை, நாகப்பட்டினம், பூம்புகார் மற்றும் புலிகாட் ஆகிய இடங்களில் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பதில் தெரிவித்துள்ள மந்திரி கேரளாவின் சுற்றுலா திட்ட கலங்கரை விளக்கம் பணிகளின் நிலைகளையும் 11 தனியார் பங்குதாரர்கள் அந்த பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதேபோல கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு கலங்கரை விளக்கங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி மன்சுக் மாண்வியா மற்றொரு கேள்விக்கு பதில் தெரிவித்துள்ளார். இந்த ஏழு கலங்கரை விளக்கங்களில் தமிழகத்தில் தனுஷ்கோடி மற்றும் கூத்தங்குளி ஆகியவை அடங்கும்.