Kathir News
Begin typing your search above and press return to search.

மதுபான ஊழல் வழக்கு: கெஜ்ரிவாலிடம் சி.பி.ஐ 9 மணி நேரம் துருவித்துருவி விசாரணை!

மதுபான ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலிடம் சி.பி.ஐ ஒன்பது மணி நேரத்துக்கு மேல் கிடுக்கு பிடி விசாரணை நடத்தியது . எதிர்ப்பு தெரிவித்த கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மதுபான ஊழல் வழக்கு: கெஜ்ரிவாலிடம் சி.பி.ஐ 9 மணி நேரம் துருவித்துருவி விசாரணை!

KarthigaBy : Karthiga

  |  17 April 2023 3:30 AM GMT

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிற டெல்லியில் மதுபான கொள்கை உடல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சலுகைகளை வழங்கி பிரதிபலனாக ஆம் ஆத்மி கட்சியினர் ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கவர்னர் சக்சேனா உத்தரவின் படி இந்த மதுபானக் கொள்கை ஊழலில் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.


இந்த வழக்கில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள மதுபான கொள்கையை உருவாக்கிய கலால்துறைக்கு பொறுப்பேற்று இருந்த அப்போதைய துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கடந்த மாதம் 26 ஆம் தேதி சி.பி.ஐ.யினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐயின் சந்தேக பார்வை முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது விழுந்துள்ளது. அந்த வகையில் கெஜ்ரிவாலிடம் 16ஆம் தேதி விசாரணை நடத்துவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவாலை கைது செய்வதற்கு சதி நடக்கிறது என கூறியது.


சம்மன்படி சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜராவதற்கு முன்பாக கெஜ்ரிவால் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் சி.பி.ஐ என்னிடம் கேட்கிற கேள்விகளுக்கு உண்மையாகவும் நேர்மையாக பதில் அளிப்பேன் .சி.பி.ஐ அதிகாரம் மிகுந்த அமைப்பு அவர்கள் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்ப முடியும். அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்பதெல்லாம் பொருட்டே இல்லை.


கெஜ்ரிவால் கைது செய்யப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு பா.ஜ.க அறிவுறுத்தி இருக்கிறது என்று கருதுகிறேன். பா.ஜ.க அப்படி ஒரு உத்தரவிட்டிருந்தால் சி.பி.ஐ என்னை கைது செய்யும் என கூறியுள்ளார். சி.பி.ஐ அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. துணை ராணுவ படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ஆயிரம் பேர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144 கீழ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


கெஜ்ரிவால் மீதான சி.பி.ஐ விசாரணை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பல இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டங்களை நடத்தினர் . இத்தனை பரபரப்புக்கு மத்தியில் கெஜ்ரிவாலிடம் சி.பி.ஐ அதிகாரிகள் 9 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். மதுபான கொள்கையை உருவாக்கிய செயல்முறை அதில் அவரது பங்கு காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிற கோப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்த நீண்டதொரு விசாரணை நடத்தப்பட்டது.


காலை சுமார் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு எட்டு மணி வரை முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்றது. கெஜ்ரிவாலிடம் விசாரணை நடைபெற்ற வேளையில் சி.பி.ஐ அலுவலக வாயிலில் பஞ்சாப் முதல் மந்திரி பகவத்மான், டெல்லி மந்திரிகள் சவுரப் பரத்வாஜ், அதிஷி கைலாஷ் கெலாட், மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தீப் பதக் , ராகவ் சத்தா, சஞ்சய் சிங் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதில் டெல்லி மந்திரிகள் சவுரப் பரத்வாஜ் ,அதிஷி கைலாஷ் கெலாட் மாநிலங்களவை எம்.பி.க்கள் ராகவ் சத்தா , சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டனர் . ஏறத்தாழ 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவித்தார் .


இதற்கிடையே கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அடுத்த கூட்டம் நடவடிக்கை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தலைமையில் மூத்த தலைவர் பங்கஜ் குப்தா, டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், துணை மேயர் ஆலே இக்பால் உள்ளிட்ட தலைவர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News