காளியம்மன் கோவில் திருவிழாவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : புதுச்சேரியில் பதற்றம்
காளியம்மன் கோவில் திருவிழாவில் நாட்டு வெடிகுண்டு வீச்சு : புதுச்சேரியில் பதற்றம்
By : Kathir Webdesk
புதுச்சேரியில் உள்ள வாணரப்பேட்டை தோப்பு பகுதியில் எல்லை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா தொடங்கி சில நாட்களாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது காளியம்மனுக்கு தினமும் காலை, மாலையில் , இரவில் சிறப்பு பூஜையும், இரவில் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.
நேற்று இரவு திருவிழா நடந்து கொண்டிருந்த போது, விழாவை காண அப்பகுதியை சேர்ந்தவர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழாவில் பிரபல ரவுடி ஒருவர் தனது கூட்டாளிகளுடன் கலந்து கொண்டதாக தினத்தந்தி செய்திகள் கூறுகிறது.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் நேற்றிரவு அங்கு வந்த முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பி ஓடி விட்டது.
திருவிழாவில் கலந்து கொண்ட பிரபல ரவுடி ஒருவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாகவும், குறிதவறி கோவில் சுவற்றில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கோவிலுக்கு வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் திருவிழாவில் பங்கேற்ற நபர் ஒருவர் காயமடைந்தார். ஆனால், குறிவைக்கப்பட்ட அந்த ரவுடியும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் வெடிகுண்டு வீசிய மர்மநபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். திருவிழாவின்போது கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலியார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பற்றி தகவல் தெரிவித்தும் போலீஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது எந்தவொரு தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்று தினத்தந்தி செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்ற வாரம், புதுச்சேரியில் தத்வபோதானந்தா சுவாமிகள் மர்ம நபர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தற்போது காளியம்மன் கோவில் மீது குண்டு வீசப்பட்டுள்ளது புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.