போலி பட்டா தயாரித்து கோவில் நிலம் விற்பனை? எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்!
போலி பட்டா தயாரித்து கோவில் நிலம் விற்பனை? எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்!
By : Shiva V
சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சமூக விரோதிகள் சிலர் போலியாக பட்டா போட்டு விற்பனை செய்து வருவதால் மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தமிழக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை அரசு மற்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று கோவில் சொத்துக்களை மீட்டு வருகிறார். அவர் சேலம் மாவட்டம், சித்தர்கோவிலில் உள்ள சித்தேஸ்வரசுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை மீட்பதற்காகவும் பல்வேறு குறைகளை சரி செய்வதற்காகவும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகளுடன் ஒரு கூட்டாய்வை மேற்கொண்டார்.
இதில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைக் களைய அரசு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்த போதும் பின்னர் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் ஆய்வு செய்யச் சென்ற ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஞ்சமலை, சித்தேஸ்வர சுவாமி கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமின்றி காணப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
முதற்கட்ட களப்பணியின் போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்தத போதும் தற்போது இந்த கோவிலில் பெண்கள் குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கு போதிய வசதிகள் இல்லை என்று தெரிய வந்துள்ளது. கோவிலில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கு வழங்கப்பட்ட வாளி, கப் போன்றவற்றை சமையல் செய்யும் பெண்ணிடம் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியதால் பக்தர்கள் குளிக்க சிரமமாக உள்ளது.
கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பட்டது குறித்து பேசிய ராதாகிருஷ்ணன் கோவிலை சுற்றி உள்ள நிலங்களை போலியாக பட்டா போட்டு சிலர் விற்பனை செய்து வருவதாகவும் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமான கோவில் நிலங்கள் என்றும் தெரிவித்தார். இதனால் மக்கள் யாரும் நிலத்தை பட்டா போட்டுக் தருவதாக எண்ணி ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவில் நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா போட்டுக் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பல கோவில்கள் ஒரு கால பூஜை கூட செய்ய முடியாமல் தவிக்கும் போது ஆக்கிரமிப்புகளை நீக்குவதை விட்டு தவறு செய்தவர்களுக்கே பட்டா போட்டுக் தருவது தவறு என்று பல இந்து அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி இந்த முயற்சியைத் தடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் போலியாக பட்டா தயாரித்து கோவில் சொத்துக்களை விற்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. இது குறித்தே திருத்தொண்டர் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.