மகளின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த ஒரே பசுவை விற்ற தந்தை - உண்மையில் நடந்தது என்ன?
மகளின் ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த ஒரே பசுவை விற்ற தந்தை - உண்மையில் நடந்தது என்ன?

சில நாட்களுக்கு முன் ஒரு ஏழை விவசாயி தான் ஏற்கனவே வாங்கி இருந்த கடனை அடைத்து தனது மகளின் படிப்புக்கு உதவும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவைப்படும் ஸ்மார்ட்போன் வாங்க தன்னிடம் இருந்த பசுவை விற்க நேர்ந்தது என்ற செய்தி பல ஊடகங்களிலும் வெளியானது. இந்த சம்பவம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார ரீதியான தாக்கங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று ஊடகங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.
தனது மகளின் படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக தனது கால்நடையை விற்க நேர்ந்த அந்த மனிதனின் நிலையை எண்ணி பலரும் அனதாபப்பட்டதோடு இந்த சம்பவம் பல ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டதால் வைரல் ஆனது.
ஆங்கில ஊடகமான NDTV யில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும் நிலை ஏற்பட்டிருப்பதால் தனது மகளுக்கு கல்வி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று எண்ணிய இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் குமார் என்ற அந்த ஏழை விவசாயி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள தேவைப்படும் ஸ்மார்ட்போன் வாங்க தனது பசுவை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற கோணத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த விஷயம் வைரலான பின் இமாசல் மாநில நிர்வாகம் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ததாகவும் பசுவை திரும்ப வாங்கித் தருகிறோம் என்று அதிகாரிகள் கூறிய போது அதை மறுத்து விட்டு மோசமான நிலையில் இருக்கும் தனது வீட்டை மத்திய அரசின் வீட்டு உறுதித் திட்டத்தின் கீழ் செம்மைப்படுத்தி தருமாறும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வருபவர்களின் பட்டியலில் தன்னைச் சேர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக NDTV வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
The Tribune என்ற ஆங்கில நாளிதழோ இமாச்சலப் பிரதேசத்தின் ஜ்வாலாமுகி பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் வகுப்புகளில் தனது மகன் கலந்து கொள்ள
தனது ஒரே வாழ்வாதாரமாக இருந்த பசுவை விற்று ஸ்மார்ட்போன் வாங்கியதாக செய்தி வெளியிட்டது. இந்த செய்தியில் கடந்த ஒரு மாதமாக ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ₹ 6000 கடன் கேட்டு வங்கிகளையும் வட்டிக்கு பணம் தருபவர்களையும் குல்தீப் அணுகியதாகவும், ஆனால் அவரது மோசமான நிதி நிலையைக் காரணம் காட்டி கடன் வழங்க அனைவரும் மறுத்து விட்டனர் என்றும் கூறியதாக கூறப்பட்டு இருந்தது.
NDTV செய்தியில் ஸ்மார்ட்போன் வாங்க எப்படியோ கடன் வாங்கி பணம் ஏற்பாடு செய்து விட்டார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் Tribune செய்தியிலோ பணம் ஏற்பாடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று விட்டு வேறு வழியே இல்லாமல் தான் பசுவை விற்றார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதை ஆதாரமாகக் கொண்டு பல ஊடகங்களிலும் கொரோனா வைரஸின் தாண்டவத்திற்கு மத்தியில், ஒரு தந்தை இயலாமையால் தனது குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க எவ்வாறு தனது ஒரே வாழ்வாதாரமாக இருந்த பசுவை விற்க நேர்ந்தது என்று சோகக் கதைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டன.
இந்நிலையில் ஜ்வாலாமுகி பகுதியின் மாவட்ட நிர்வாகம் இந்த சம்பவத்தைக் பற்றி ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுப்பியது. குல்தீப் குமாரை அணுகிய அதிகாரிகள் அவரிடம் ஏழு கால்நடைகள் இருப்பதையும் அவர் பால் விற்பனை மூலம் வருமானம் ஈட்டுவதையும் கண்டறிந்தனர். மேலும், வறுமையில் வாடும் குல்தீப்பிடம் ஸ்மார்ட்போன் வாங்கக் கூட பணம் இல்லை என்ற ரீதியில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் உண்மையில் அவரது குழந்தைகள் அருகிலேயே அரசுப் பள்ளி இருந்தும் தனியார் பள்ளியில் தான் பயில்வதாகவும் அவர்களிடம் விலை உயர்ந்த புத்தகங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ஒரே நிதி ஆதாரமாக இருந்த பசுவை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்று செய்திகள் வெளியானதால் அவருக்கு உதவும் நோக்கில் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நடத்திய விசாரணையில் குல்தீப் மழைக்காலத்தில் தனது பசுவைப் பராமரிக்க இடவசதி இல்லாததால் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவருக்கு மனமுவந்து பசுவை விற்றார் என்பதைத் தெரிந்து கொண்டனர்.
குழந்தைகளின் கல்விக்காக வாங்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன் 3 மாதங்களுக்கு முன்பே வாங்கப்பட்டு விட்டதாகவும் உள்ளூர் பஞ்சாயத்தால் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் புதிய வீடு கட்ட குல்தீப் குமாரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும் கூட தெரிய வந்தது.
மாவட்ட நிர்வாகம் பசுவை திருப்பி வாங்கித் தருவதாகக் கூறிய போது தன்னிடம் அதைப் பராமரிக்க இடம் இல்லை என்பதால் அது தனக்கு வேண்டாம் என்று குல்தீப் கூறி விட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வழக்கம் போல டிஆர்பிக்காக மனம் போன போக்கில் ஒரு சாதாரண நிகழ்வை ஊதிப் பெரிதாக்கி செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்திரை மீண்டும் ஒரு முறை கிழிக்கப்பட்டுள்ளது.
நன்றி: Opindia