சுற்றுலாத்துறையில் உருவாகும் அமோகமான வேலைவாய்ப்பு : பிரதமர் மோடி அதிரடி தகவல்
பிரதமர் மோடி 51 ஆயிரம் பேருக்கு ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
By : Karthiga
வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை நடத்தி வருகிறது. எட்டாவது வேலை வாய்ப்பு திருவிழா நேற்று நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்தது. பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார். பெரும்பாலானோர் மத்திய ஆயுத போலீஸ் படைகள், போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு , டெல்லி போலீஸ் ஆகியவற்றிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்களிடையே காணொளி காட்சி மூலம்பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிலேயே ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நடப்பு புத்தாண்டிலேயே மூன்றாவது இடத்தை அடையும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். முழு பொறுப்பெடுத்து இதை செய்து முடிப்பேன். ஆட்டோமொபைல் துறையும் , மருந்து உற்பத்தித் துறையும் வேகமாக வளர்ந்து வருகின்றன . அதனால் பெருமளவு வேலை வாய்ப்பு உருவாகும். உணவு முதல் மருந்து உற்பத்தி வரை விண்வெளி முதல் ஸ்டார்ட் அப் வரை அனைத்து துறைகளும் வளர்வது அவசியம். அப்போதுதான் பொருளாதாரமும் வளரும்.
ரூபாய் 26 லட்சம் கோடிக்கு உற்பத்தியை கண்டுள்ள உணவு பதப்படுத்துதல் துறை இன்னும் மூன்று ஆண்டுகளில் 35 லட்சம் கோடியை எட்டும் . அதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 2003ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கு சுற்றுலா துறையின் பங்களிப்பு ரூபாய் 20 லட்சம் கோடியாக உயரும். அதன் மூலம் அத்துறையில் 13 முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் . இவை வெறும் எண்கள் அல்ல வேலை வாய்ப்பு உருவாக்கி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் இவை சாமானியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினி, கணினி ஆகியவற்றை வாங்குவதில் கவனம் செலுத்துகிறது. அதனால் அவற்றின் உற்பத்தி அதிகரிக்கும் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் கடந்த 9 ஆண்டுகளில் தொழில்துறை சிறப்பாக செயல்பட்டதை உணர்ந்து கொள்ளலாம் . ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜன்தன் வங்கி கணக்குத் திட்டத்தை தொடங்கினோம். இதுவரை 50 கோடிக்கு மேற்பட்ட ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கி மித்ராக்களாக 21 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் . முத்ரா திட்டத்தில் பிணை இல்லாமல் ரூபாய் 24 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
SOURCE :DAILY THANTHI