இந்திய செயலியான ஷேர் சாட்டில் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆர்வம்.!
இந்திய செயலியான ஷேர் சாட்டில் முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆர்வம்.!

மைக்ரோசாஃப்ட், இந்தியச் சமூக ஊடக தளமான ஷேர் சாட்டில் (Share Chat) 100 மில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வட்டாரங்கள் கூறும் தகவல்களின்படி, இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் ஷேர் சாட் விரும்பும் நிதியில் மைக்ரோசாஃப்டின் முதலீடு, மூன்றில் ஒரு பங்காகும்.
ஆனால் ஷேர் சாட் ஏற்கனவே இருக்கும் பழைய முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டிய பிறகே, புதியவர்களிடம் ஒப்பந்தம் செய்வார்கள் என்று மற்றொரு வட்டாரம் தெரிவிக்கின்றது. மைக்ரோசாப்ட் உடனான இந்த ஒப்பந்தம் முடிவடைய சில மாதங்கள் ஆகும் என்றும் பேச்சு வார்த்தைகள் வெறும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஏற்கனவே அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளை வாங்குவதற்கும் சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் மற்ற செயல்பாடுகளை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், டிக்டாக்கின் இந்திய சந்தையையும் ஐரோப்பிய சந்தையையும் பெறுவதற்கு மைக்ரோசாஃப்ட் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செயல்பாடுகளை வாங்குவதற்கான செய்திகள் உறுதிப் படுத்தப் பட்டாலும் இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளை குறி வைப்பது மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பினான்சியல் டைம்சின் தகவலின்படி , பைட்டான்ஸ் உடனான மைக்ரோசாப்டின் ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை எனில், பைட்டான்ஸ் மற்ற இந்திய முதலீட்டாளர்களுக்கு அல்லது அந்நிய முதலீட்டாளர்களுக்கு தனது இந்திய செயல்பாடுகளை விற்கப் போவதாக கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட், ஷேர் சாட்டில் ஆர்வம் காட்டுவது மிகவும் சுவாரசியமானது. ஏனெனில் ஷேர் சாட் டிக்டாக்கின் போட்டியாளரான மொஜ் என்ற வீடியோ பகிரும் தளத்தை டிக் டாக் தடை செய்யப்பட்ட மறு நாள் அன்று திறந்து வைத்தது. அதன் ஹலோ (Helo) பயன்பாடும் ஷேர் சாட் உடன் போட்டியிடுகிறது.
மைக்ரோசாப்ட் அல்லது ஷேர் சாட் இரு நிறுவனங்களுமே இந்த தகவல்களுக்கு எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
Source: Hindustan Times