நேரு அடித்துக் குவித்திருக்கும் ஆஸ்திகளைக் கணக்கிட்டால் கால்குலேடருக்குமே கிறுக்கு பிடிக்கும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காட்டிய அதிரடி!
நேரு அடித்துக் குவித்திருக்கும் ஆஸ்திகளைக் கணக்கிட்டால் கால்குலேடருக்குமே கிறுக்கு பிடிக்கும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ காட்டிய அதிரடி!

"ஊழல் பேர்வழியான நேருவை வைத்து பினாமி அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திருவாளர் துண்டுச் சீட்டு" என்று ஸ்டாலினை கண்டித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
கனிம வளங்களைக் களவாடுவதிலும், காவேரிக்கரையில் உள்ள மொத்த சொத்துக்களையும் அபகரித்துச் சுருட்டுவதிலும், தில்லை நகர் தொடங்கி, திருச்சியையே வளைப்பதிலும், பெரும் கொள்ளைக்காரக் குடும்பம் என்று பெயர் பெற்றதோடு, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையையே காய்லாங்கடையாக மாற்றியவர் நேரு என்பதை நாடு அறியும்.
பூவாளூரில் நவீன அரிசி ஆலை, அதனைச் சுற்றி நெல் விளையும் நிலங்கள், புங்கனூர் ஏரியைத் தூர்த்து, புதுவகையான கட்டடங்கள் கட்டி, கல்வி சேவை என்ற பெயரிலே கொள்ளையடிக்கும் கேர் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்கள், சென்னையிலும் கோவையிலும், கண்ணுக்குள் அடக்க முடியா அளவிற்கு அடுக்கு மாடிக்கட்டடங்கள், கூடவே தன் தம்பிமார்களான ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோரை திருச்சிக்கு ஒருவர், சென்னைக்கு ஒருவர், கோவைக்கு ஒருவர் என மண்டலங்கள் வாரியாக நியமித்து, நேரு அடித்துக் குவித்திருக்கும் ஆஸ்திகளைக் கணக்கிட்டால் கால்குலேடருக்குமே கிறுக்கு பிடிக்கும் என்பது நிச்சயம்.
உத்தமர் நேரு மீதான சொத்துக் குவிப்பு வழக்கிற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் நிச்சயம் வெளிவந்து விடும். மேலும், வக்ஃபு வாரியச் சொத்துகளை வளைத்து, பாசன வாய்க்கால்களைத் தூர்த்து, திருச்சியில் அறிவாலயம் அமைத்த விவகாரமும், நேருவும், அவரது தம்பிமார்களும் ஆடிய ஆட்டங்களால், கண்ணீர் விட்டுக் கதறி அழுத குடும்பச் சாபங்களும், நேருவையும் சேர்த்தே சிறைக்கு அனுப்பும் என்பது நிச்சயம்.
இன்று, ஸ்டாலினுக்காக அறிக்கைவிட்டிருக்கும், இதே நேரு, 2006-11ம் ஆண்டுகளிலான திமுக ஆட்சி காலத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நிருபர் மற்றும் அலுவலகத்தைத் தன் அடியாட்களை ஏவி, தாக்குதல் நடத்தியவர் என்பதும், அதன் மீதான புகாரை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நீர்த்து போக வைத்தவர் என்பதையும் மக்கள் அறிவார்கள்" என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.